தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார்

jayalalithaதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா திங்கட்கிழமை (05.11.2016) இரவு 11.30 மணியளவில் அவரது இதயம்  செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டதாக அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவருக்கு வயது 68. முன்னதாக, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக ஜெயலலிதாஅப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிறன்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

 

ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்கா வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஜெயலலிதாவின் உடன் அவரது உத்தியோகபூர்வ இல்லமான போயஸ் காடனுக்கு  கொண்டுசெல்லப்பட்டு கிரியை சடங்குகள் முடிக்கப்பட்டு காலை (06)  ராஜாஜி மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை… ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே! எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

இதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.

அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.15267971_1656381894388087_7765723822452108400_n

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்! தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்களின் துக்கத்தில் விகடனும் பங்கெடுக்கிறான்.

ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com