தமிழக சட்டபேரவை தேர்தல் இன்று. 1,663 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி. மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், தே.மு.தி.க- மக்கள் நல கூட்டணி தலைமையில் ஒரு அணியும், பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவுகிறது. புதுச்சேரியிலும் ஆளும் என்ஆர் காங்கிரஸ், திமுக- காங்கிரஸ், அதிமுக, மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்டவைகள் களத்தில் நிற்கின்றன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3,454 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர். தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதால் மற்ற 232 தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம். இந்த தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்கள் அவசர தேவைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த தேர்தலில் 5 கோடியே 80 லட்சத்து ஆயிரத்து 540 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2 கோடியே 87 லட்சத்து 65 ஆயிரத்து 967 பேர். பெண்கள் 2 கோடியே 92 லட்சத்து 30 ஆயிரத்து 853 பேர். மூன்றாம் பாலினத்தவர் 4 ஆயிரத்து 720 பேர்.

26 ஆயிரத்து 961 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலமும், 10 ஆயிரம் வாக்குச்சாவடிகள் வீடியோ கேமரா மூலமும், 8 ஆயிரத்து 541 வாக்குச்சாவடிகள் நுண் பார்வையாளர்கள் மூலமும் கண்காணிக் கப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சிறப்பு ஏற்பாடாக ஒரு வயர்லெஸ் கருவி கொடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தலில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலான வாக்குப்பதிவு எந்திரங்கள் அண்ணா நகர் தொகுதி உள்பட 17 தொகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. வாக்காளர்கள் எந்த வித சிரமமும் இன்றி ஓட்டுப்போடுவதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டு உள்ளன.

ஒரு லட்சத்து 25 ஆயிரம் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர வெளிமாநிலங்களிலிருந்து வந்துள்ள 30 ஆயிரம் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தம் 5 ஆயிரத்து 417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதில் 1,663 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் போலீசார் தவிர துணை ராணுவ வீரர்கள் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com