தமிழகத்தில் பா.ஜ.க மூன்றாவது சக்தி! – சொல்கிறார் மோடி

தமிழகத்தில் பா.ஜ.க 3-வது சக்தியாக உருவெடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி இன்று (6-ம் தேதி) தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழகம் வந்தார். இன்று மாலை கிருஷ்ணகிரி அருகே ஓசூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. நிலக்கரி துறை, 2ஜி, 3ஜி என அனைத்திலும் ஊழல் செய்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி மீது எந்த ஊழல் புகாரும் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் யூரியா, கேஸ் சிலிண்டர் ஊழலை ஒழித்தோம். தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வங்கிகளுக்கு ஏழைகள் செல்ல முடியாத நிலையே பல ஆண்டுகளாக நீடித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகே ஏழைகள் வங்கிகளுக்கு செல்ல முடிந்தது. சிறு வியாபாரிகளுக்கு வங்கிகளில் கடன் கிடைக்காத நிலை இருந்தது. அவர்களுக்காக முத்ரா வங்கி தொடங்கி, அதன் மூலம் ரூ.1.30 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது விரைந்து வந்து உதவி செய்தேன். தமிழகத்தில் 3வது சக்தியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளது” என்றவர், அனைத்து பா.ஜ.க வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com