தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நடந்த கருத்து கணிப்பு!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும், தி.மு.க. 101 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு,  தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டி.வி.க்காக சி.ஓட்டர்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது.

தமிழகத்தில் தி.மு.க.வை விட,  அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், என்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க. 116 தொகுதிகளிலும், தி.மு.க. 101 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும், மற்ற கட்சிகளுக்கு 17 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு 41.1 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், தி.மு.க கூட்டணிக்கு 39.5 சதவீத வாக்குகளும், பாஜனதாவின் வாக்கு வங்கி 2.2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் கட்சியான மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 156 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 184 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 114 தொகுதிகளிலும், காங்கிரஸ் 42 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

அஸ்ஸாமில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 57 தொகுதிகளிலும், அகில இந்திய பக்ரூதீன் அஜ்மல் ஜனநாயக முன்னணி 19 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

கேரளாவில் உள்ள மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் கட்சியான காங்கிரஸ் 49 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 89 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக கூட்டணி ஒரு இடமும், மற்றவைக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 72 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 66 இடங்களும் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com