தமிழகத்திற்கு தங்கம் வாங்கிக் கொடுத்த தங்க மகன் மாரியப்பன் ‘தங்க’வேலு

thaa1
பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால், தங்கவேலுவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் கடும் வலியும், வறுமையும் நீக்கமற நிறைந்திருந்தது. இன்று மீடியாவில் ஃப்ளாஷ் ஆவதற்கு முன்பு, தமிழகத்தில் எத்தனை பேருக்கு தங்கவேலுவைத் தெரிந்திருக்கும்? ‘பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை’ என்ற அவப்பெயரைச் சுக்குநூறாக உடைத்திருக்குறார் தங்கமான தங்கவேலு.

சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தந்தையான தங்கவேலு, செங்கல்சூளையில் வேலை செய்கிறார். இவரது தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அதன் பிறகு, எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அவரது கால் குணமாகவே இல்லை. தங்கவேலுவுக்கு விளையாட்டில் ஆர்வம். ஆனால், பள்ளியில் அவரது கால் ஊனத்தைக் காரணம் காட்டி விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்.thaa22

மனம் உருகி மற்ற மாணவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகவைத்திருந்த தங்கவேலுவுக்கு, விடாமுயற்சி குணம் இருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு தங்கவேலு மட்டும், மைதானத்தில் தனியாக விளையாடினார். இதனை ஒருநாள், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் பார்த்தார். அப்போது, தங்கவேலுவுக்கு வாலிபால் விளையாட்டில்தான் அதீதஆர்வம் இருந்தது. உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்தான் தங்கவேலுவுக்குள் இருந்த உயரம் தாண்டுதல் திறமையைக் கண்டு, உயரம் தாண்டுதலில் அவருக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.thaaa66

‘‘என்னால் உயரம் தாண்ட முடியும் என என்னுடன் படித்தவர்க
ளால் நம்ப முடியவில்லை. அவர்கள் முன்பு நான் தாண்டிக் காட்டியபோது அசந்துபோனார்கள். அதன்பிறகு, அவர்களின் உதவி மூலமே பல போட்டிகளில் கலந்துகொண்டேன். நான் உடல் ஊனமுற்றவன் என எப்போதும் நினைத்ததில்லை’’ என்கிறார் தங்கவேலு.

தனது 14 வயதில், முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் தங்கவேலு. அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரனிடம் 12-ம் வகுப்புவரை பயிற்சி எடுத்து தங்கவேலு, அதன்பிறகு பெங்களூருவில் சத்தியநாராயணா என்பவரிடம் பயிற்சி பெற்று மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம், 2011-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், சர்வதேச உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் என தங்கவேலு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்தப் பதக்கங்கள் எல்லாம், அவரது குடிசை வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.

தங்கவேலுவின் கால் உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு அவரது அம்மா ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் கடனை இன்னும் அடைக்க முடியாத அளவுக்கு வறுமையில் உழலும் தங்கவேலுவின் குடும்பத்துக்குத் தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. தங்கவேலுவின் இந்தச் சாதனையை பெரியவடகம்பட்டி கிராம மக்கள் திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். தங்கவேலுவுக்கு பேனர்வைத்தும், அவரது படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும் பெரியவடகம்பட்டி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

தங்க மகனுக்கு சல்யூட்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com