தகவல் அறியும் சட்டமா…? வழமைபோல கடிதம் தாங்கோ பதிலிருந்தால் தாறம்…!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பெப்ரவரி 03 ஆம் திகதி அமுலுக்கு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் ஒரு சில நாட்களின் பின் உலக தரவரிசையில் இலங்கைச் சட்டம் சமூன்றாம் இடத்திற்கு முன்னேறிவிட்டதாக உடக அமைச்சர் கஜந்த கருணாதிலக்க கூறியிருந்தார்.

சட்டம் இன்னமும் முழுமையாக அமுல்ப்படுத்தப்படாத சூழ்நிலையில் உலக தரவரிசையில் இலங்கை முன்னேறியிருப்பது தமக்குக் கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியிருந்தார்.

சட்டம் அமுலாகி பன்னிரண்டு நாட்கள் நடந்துவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் சில அரச திணைக்களங்களில் குறித்த சட்டத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆராய்துபார்த்தபோது யாழ்ப்பாணத்தில் சட்டம் அமுலுக்கு வர இன்னமும் சில மாதங்கள் அவர்களிற்குத் தேவைப்படக்கூடும் என்பது உணரமுடிந்தது.

சில அலுவலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிற்கு சட்டம் தொடர்பில் பூரண விளக்கமில்லாத நிலையே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள பிரதேச செலகம் ஒன்றில் சட்டம் தொடர்பில் அணுகியபோது “தம்பியவ சம்பவத்தில நீங்கள் சம்மந்தப்பட்டிருந்தால்தான் தகவல் கிடைக்கும் நீங்கள் பொதுவான தகவல்களை எல்லாம் பெற்றுக்கொள்ள ஏலாது” எனப் படார் எனப் பதில் வந்தது.

“ஐயா உங்கள் திணைக்களத்துடன் சம்பந்தப்படாவிடினும் ஒரு உதாரணத்திற்கு கேட்கின்றோம் வீதி நிர்மாணம் ஒன்று குறித்த தகவல்களை ஒரு பொதுமகனாக கேட்க உரிமை இருக்கிறதே” என்றோம்.

”இல்லை தம்பயவ நீங்கள் அந்த றோட்டில வசிக்கிறவயா இருந்தாத்தான் தகவல் எடுக்கலாம்” என வந்தன பதில்கள்.

மற்றோரு செயலகத்தில் “ இப்பத்தான் புத்தகத்தைப் படிக்கிறோம் இதைப் படித்து முடிக்கவே சில வாரங்கள் ஓடிப்போய்விடும் போல அதுக்குப் பிறகுதான் பார்க்கலாம். சட்டம் புதுசு தான தம்பியவ” என்றார் அந்த அதிகாரி. அவர் நிர்வாக உத்தியோகத்தராக இருக்கிறார். ஒரு பகுதிநோர பணி போல தகவல் தரும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

 

யாழ்.மாவட்ட செயலகத்தில் தகவல் வழங்குவதற்காக மேலதிக அரசங்க அதிபரே நியமிக்கப்பட்டு உள்ளார். யாழ்.மாநகர சபையில் இதுவரை எந்தவொரு அதிகாரியும் இதற்கு என நியமிக்கப்படவில்லை. அது தொடர்பில் பிரதி ஆணையாளர் தெரிவிக்கையில் ,

“நாம் மக்களுக்கு எந்த தகவல்களையும் இதுவரை மறைக்கவில்லை. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டம் தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது அதனை நடைமுறைப்படுத்த சில மாதங்கள் தேவை. உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமோ அதனைக் கடிதம் மூலம் எழுதிக் கேளுங்கள் அதற்கான பதில் இருந்தால் வழங்குகின்றோம்.” என்பதாக இருக்கிறது அவரது பதில்.

பெரும்பாலான திணைக்களங்களில் ஏற்கனவே அங்கு வெவ்வேறு பணிகளில் உள்ள அதிகாரிகளே தகவல் தரும் அதிகாரிகளாகவும் கடமையாற்றுகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு என உத்தியோகபூர்வமாக பிரத்தியோக பணியாளர்களாக எட்டாயிரம் பட்டதாரிகளை உள்வாங்கப்போவதாக  அரசு வாக்குறுதி அளித்தபோதிலும் அதன்படி அதிகாரிகளை நியமிக்காத சூழலில் இரண்டு பணிகளை சுமந்து தற்போதுள்ள அதிகாரிகள் திண்டாடப்போவதும் வழமைபோல அவரிடம் போங் கோ அவரிடம் போங்கோ என கைகள் நீட்டிக் காட்டப்பட  மக்கள் அலுவலக மாடிப் படிகளில் ஏறி இறங்கியே காலம் நகர்ந்திடப் போவதும் தான் உண்மை.

சட்ட வரைபு திறனில் உலக தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்த தகவல் அறியும்உரிமைச் சட்டம். அதன் நடைமுறைப்படுத்தல் திறனில் உலக தரவரிசையில் முன்னேற்றம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com