தகவல் அறியும் உரிமைச் சட்டம் – கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிவதைப் போன்றது

Media Ministerதகவலறியும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதானது கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிவதைப் போன்றது. இந்தச் சட்டமூலத்தினால் எதிர்க்கட்சியினருக்கே அதிகமான நன்மை கிடைக்கப் போகிறது என வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

தகவலறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்திய பல உலக நாடுகள் தமது இரண்டாவது ஆட்சிக் காலப் பகுதியிலேயே இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளன. எனினும் தமது அரசாங்கம் முதலாவது ஆட்சிக் காலத்தில், ஆட்சியமைத்து ஒருவருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரே இச்சட்டத்தை கொண்டுவந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று(23) ஆரம்பமான தகவலறியும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு தமது அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் அர்ப்பணிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டியிருப்பதாகவும், முறையான நிர்வாகத்தைக் கொண்ட நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் உள்ளது என்பதை இச்சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் வெளிக்காட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன்மூலம் எதிர்காலத்தில் சிறந்ததொரு வரலாறு உருவாவதுடன், ஜனநாயகத்தைக் கொண்டநாடு என்ற நற்பெயர் ஏற்படும். இந்தச் சட்டம் எல்லாவற்றையும் நிவர்த்திக்கும் தைலமாக இல்லாவிட்டாலும், பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதாக அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தகவலறியும் சட்டமானது உலகில் 7 ஆவது சிறந்த சட்டமாகும். தெற்காசியாவைப் பொறுத்த வரையில் இந்திய சட்டமூலம் முதலாவது இடத்திலும், இந்த சட்டமூலம் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. அரசியலமைப்பு ரீதியான தடை இருந்திருக்காவிட்டால் தெற்காசியாவில் முதல்தர சட்டமாக இது இருந்திருக்கும். தகவலறியும் சட்டம் முதலில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அரசியலமைப்பில் இதற்குக் காணப்படும் இடம் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைகளில் இச்சட்டமூலத்துக்கு அரசியலமைப்பில் காணப்படும் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. சிறு திருத்தங்களை முன்வைத்துள்ள உயர்நீதிமன்றம் அவற்றை நிறைவேற்றினால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனப் பரிந்துரைத்துள்ளது. இந்தத் திருத்தங்கள் சட்டமூலத்தின் உள்நோக்கத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறினார். அரசாங்கத்திலும், அரசசார்பற்ற நிறுவனங்களிலும், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களிலும் தகவல்களை அறிந்துகொள்வதைப் போன்று, அவற்றின் செயற்பாடுகள் குறித்து கேள்வியெழுப்புவதற்கும் மக்களுக்கு இந்தச் சட்டமூலத்தின் ஊடாக உரிமையளிக்கப்பட்டுள்ளது.

கிராமிய வைத்தியசாலையில் ஏன் மருந்துத் தட்டுப்பாடு இருக்கின்றது என்பதை சிறிய தொகையொன்றை கொடுத்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதன் ஊடாக காரணத்தை அறிவதற்கான உரிமை மக்களுக்குக் கிடைக்கிறது. அதேபோல, கிராமத்தில் வீதியொன்றுக்கு கொங்கிரீட் போடும்போது அதன் தரம் என்ன உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள இடம் ஏற்படுகிறது. தற்பொழுது பரபரப்பாகப் பேசப்படும் திறைசேரிமுறி விநியோகம் குறித்த செயற்பாடுகளில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தேவையானவர்களுக்குத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும். சுதந்திர ஊடகத்தை உறுதிப்படுத்திய அரசாங்கம் என்பதால் ஊடகவியலாளர்களை இலக்குவைத்து கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். இச்சட்டமூலத்தினால் ஊடகவியலாளர்களுக்கும் நன்மை கிடைக்கும். வதந்திகள், போலியான தகவல்களை வெளியிடுவதற்குப் பதிலாக உண்மையான தகவல்களை அறிந்து அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.

அதேநேரம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் வரை அவை குறித்த தகவல்கள் பகிரங்கப்படுத்த முடியாது என சில விடயங்கள் இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், பாராளுமன்ற சிறப்புரிமையை பாதிக்கும் விடயங்கள் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது. மறுபக்கத்தில் ஏதாவது ஒரு விடயம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட வேண்டும் என நாட்டு மக்கள் மத்தியில் நிலைப்பாடொன்று ஏற்பட்டால் தகவல் ஆணைக்குழுவுக்கு இதுபற்றிய தீர்மானம் எடுக்க முடியும். இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்களில் தகவல்களை அறிவதற்கான விண்ணப்பப் படிவங்களை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம். பாடசாலைகள், பொலிஸ் நிலையங்கள் என சகல நிறுவனங்களிலும் தகவல்களை வழங்கும் அதிகாரியொருவர் நியமிக்கப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த இன்னும் 8 ஆயிரம் அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும்.

தகவல் அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைக்காவிட்டால் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்ய முடியும். 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படும். நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com