டக்ளஸ் அங்காலும் இஞ்சாலும் வாலாட்டுறார் – சம்பந்தன் எங்களிற்காய் கதைப்பதில்லை – உவங்கள் எங்களிற்கு தேவையில்லை

SAMSUNG CAMERA PICTURES

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் மக்களிடம் ஒரு முகமும் அரசிடம் இன்னோர் முகமுமாக இரட்டை முகம் காட்டுவதாகவும் அவர்களால் தமக்கு தீர்வு கிடைக்கும் என தாம் ஒருபோதும் நம்பவில்லை என்றும் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற  மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்டு சாட்சியமளித்துள்ள பெண் ஒருவர் தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நேர்மையான நீதவான் மூலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே தமக்கு நீதி கி்டைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாகச் சாடிய அப் பெண்மணி மேலும் தெரிவிக்கையில்,

 

சிலபேர் எங்களோட நல்லமாதிரிக் கதைச்சுப்போட்டு அவங்களோட போய் அவங்களுக்காக எதைக்கிறாங்கள். ஏன் சம்பந்தன் எல்லாம் இண்டைக்கு என்ன செய்யிறான். நானும் செய்தீல நெடுகக் கேக்கிறது ஒண்டும் எங்களுக்காகக் கதைக்கிறானில்ல. அவன் டக்ளஸ் அங்காலும் இஞ்சாலும் வாலாட்டுறான். உவங்கள் எங்களிற்கு தீர்வு பெற்றுத்தருவாங்கள் எண்டு எனக்கு நம்பிக்கையில்லை. எங்களுக்கு அவங்கள் ஒண்டும் தேவையில்லை. எங்களுக்கு ஒரு நடு நீதி நீதவான்தான் வரவேணும்.

என்ன சொல்லுங்கோ நீதவான் எண்டா நேரத்திற்கு தக்கவாறு தாங்கள் சட்டத்தைக் கதைக்கிறாங்கள். உண்மையான நீதி கதைக்கிறாங்கள் இல்ல. பிரட்டிப் பிரட்டி பொய்யான தகவலுக்கும் பொய்யான நீதவான் இருக்கிறான். இந்த விசாரணைகளுக்கெல்லாம் நேர்மையான நீதவான்தான் நீதிக்கு வரவேண்டும். என்றார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மன்னார், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் சனிக்கிழமை இடம்பெற்றன.

உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்களுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

(செய்தியின் முக்கியத்துவம் கருதி குறித்த பெண்ணினது சாட்சியம் குறித்த பதிவுகள்  அவரதுமொழிநடையில் உள்ளதனால் அவர் பயன்படுத்திய சில ஒருமை வாசகங்கள் நீக்கப்படவில்லை என்பதை வாசகர்களிற்கு தெரி்யப்படுத்துகின்றோம் – இதனால் ஏற்படும் அசௌகரியங்களிற்கு வருந்துகின்றோம் – ஆ-ர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com