சற்று முன்
Home / செய்திகள் / ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிப்பு

ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிப்பு

நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், இன்று மாலை விடுவிக்கப்பட்டார். சிறைச்சாலைக்கு முன்னால் திரண்ட பொதுபல சேனவின் ஆதரவாளர்கள் பல நூற்றுக் கணக்கானோர், ஞானசார தேரரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

“ஜனாதிபதியிடமிருந்து, விடுதலை செய்வதற்கான பொது மன்னிப்பளிப்பு சான்றிதழ் இன்று வியாழக்கிழமை மாலை உத்தியோகப்பூர்வமாகக் கிடைத்தது. அதனடிப்படையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர் விடுதலை செய்யப்பட்டார்” என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

2016 ஜனவரி 25 ஆம் திகதி, ஹோமாகம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வழக்கின் வாதியான சந்தியா எக்னலிகொடவுக்கு ஞானசார தேரர் மிரட்டி அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டார் என்று ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிமன்றால் தண்டனை வழங்கப்பட்டது.

அப்போது ஹோமாகம நீதவானாக இருந்த ரங்க திஸாநாயக்கவால் இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அதன்படி அந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகள் அனுபவிக்கும் வகையில் 19 வருட சிறைத் தண்டனை கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றால் வழங்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் இந்தத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சுயாதீனக் கட்டமைப்பான நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிக்கு சுமார் 9 மாதங்களில் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com