ஜோதிடம் வேகத்தடையல்ல… வாழ்க்கை வழிகாட்டி!

ஜோதிடம் நமது வாழ்க்கைக்கு எந்த அளவில் பயன்படப் போகிறது? நாம் ஏன் அதை நம்பவேண்டும்? பலரது மனதிலும் உள்ள கேள்வி இது. இன்றைய இளைஞர்கள் பலருக்கும், தெய்வ நம்பிக்கை, ஜோதிடம், சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆகியவற்றில் பெரிய அளவில் ஆர்வமில்லாமல் இருப்பது ஏன்? என்பது பற்றி ஜோதிட விற்பன்னர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணனிடம் கேட்டோம்.

ஜோதிடம் என்பது 27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் இணைத்து, எந்தநேரத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்கும் மிகச் சிறந்த கலையாகும்.

 

பண்டைய காலங்களில் ஒரு நாட்டின் அரசன், தன் நாட்டையே வழிநடத்திச் செல்ல, ஆலோசகராக அரசவை ஜோதிடர்களை நியமித்து, அவர்கள் ஆலோசனைப்படி நடந்து கொண்டார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு தன் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு ஒரு கேடும் வராமல் தன் நாட்டை சுபிட்சமாக வைத்துக்கொண்டார்கள்.

நமது நாட்டின் பண்பாடு, கலாசார சின்னங்களாக விளங்கும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களும் ஜோதிடத்தின் தன்மையை மிகச் சிறப்பாக விளக்குகின்றன.

மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் முறையே சுக்கிரன், புதன், செவ்வாய், சனி, குரு, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய ஏழு கிரகங்களின் கதிர் வீச்சை உள்வாங்கி அதற்கேற்பதான் இயங்கும். எந்த கிரகத்தின் கதிர் அலைகள் அதிகமாக இருக்கின்றதோ, அதன் தாக்கம் அவருக்கு அதிகமாக இருக்கும். இதை ஜாதகத்தில். ஆட்சி, நட்பு, உச்சமடைந்திருக்கும் கிரகத்தின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். குறைவாக இருப்பதை, மறைவு, நீச கிரகம் சுட்டிக்காட்டும். இந்த கிரகங்கள் எல்லா, அவை செல்லும் பாதையில் உள்ள 27 நட்சத்திரங்கள் கொண்ட மண்டலத்தின் வாயிலாக எடுத்துக்காட்டும்.

சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் அதிக ஆணவம், கோபம், ஜெயிக்க வேண்டும் என்கிற ஆதிக்க எண்ணத்தையும், சந்திரன் அவசரத்தன்மையையும், நிலையில்லா மனத்தையும், புதன் நல்ல அறிவு மற்றும் அடுத்தவரை ஏமாற்றும் குணத்தையும், குரு மனிதனின் பக்குவத்தையும், சுக்கிரன் அதிக ஆசையையும், போக குணத்தையும், சனி கடின உழைப்பையும், மனக்கவலையையும் ஏற்படுத்தும். இவை ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால், அதிகமாகவும், பலவீனமாக இருந்தால், குறைவாகவும் இருக்கும்.

சூரியன் அதிக தலைவலி, செவ்வாய் உடலில் அதிக உஷ்ணத்தையும், புதன் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும், குரு உடலின் ஜீரண சக்தி, கரு உற்பத்தித் தன்மையையும் , சுக்கிரன் தாம்பத்யம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், சனி தீராத வியாதிகள், நோயற்ற தீர்க்கமான வாழ்வையும், தெரிவிக்கும். இவையாவும் ஒரு மனிதனுக்கு எப்போது , எந்த முறையில் வரும் என்பதை அவற்றின் காலங்கள் மூலமாக, அதாவது அந்தந்த தசா புத்திகள் மூலம் கண்டறிந்து விளக்குவதுதான் ஜோதிடம்.

ஶ்ரீரங்கம் கிருஷ்ணன்

இன்றைக்கும் கேரளாவில் 27 நட்சத்திரங்கள் அதன் 108 பாதங்களுக்கு ஏற்ப உள்ள மூலிகைகளைக் கொண்டு இந்த 9 கிரஹங்களுடைய நல்ல சஞ்சாரம் உள்ள காலங்களில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை கொடுக்கும் முறை உள்ளது. இதை ஆயுர்வேதம் உறுதி செய்கிறது.

அதேபோல் பண்டைய வேத கால ஜோதிடம் இதன் தன்மையை ஆழமாக அதுவும் தெளிவாக விளக்குகிறது. ஜோதிடத்தை ஒரு மூடநம்பிக்கை சார்ந்த விஷயமாகப் பார்க்காமல், எதிர்காலத்தில் நமக்கு ஏற்படப்போகும் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்துகொண்டு அதற்கு ஒரு முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துக் கொள்வதில் தவறில்லை.

ஒரு விஷயத்தைச் செய்து முடித்த பிறகு ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடர்களைத் தேடி ஒடி, ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா , அவர்கள் ஒன்று சேர்வார்களா என்று பலர் வேதனையோடு கேட்கிறார்கள். எங்கே போகிறது, இவர்களின் கனவு வாழ்க்கை. ஜனன ஜாதகம் என்பது நமது பிறந்த கால இ.சி.ஜி. ரிப்போர்ட் மாதிரி. ஆகவே, உங்களின் எதிர்கால பொன்னான வாழ்க்கைக்கு சற்று நேரம் ஒதுக்கி, இதிலும் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

ஜோதிடம் வேகத்தடையல்ல… வாழ்க்கை வழிகாட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com