ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் – விசாரணைக் கமிஷன் அமைப்பதில் உறுதியாகவுள்ளோம் – ஓ.பி.எஸ்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய (புதன்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பின்போது அதிமுக எம்.பி., மைத்ரேயன் உடன் இருந்தார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திடீர் தியானப் புரட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன். அதிமுகவுக்கு சிறப்பான தலைமை தேவை. தற்போது கட்சியில் நடைபெறும் நிகழ்வுகளால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். மக்களுக்காக தன்னந்தனியாக போராடத் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாக கூறினார்.

இதனையடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில் இன்று காலை சென்னையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்ற அவப்பெயர் எப்போதும் வந்ததில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுவடுகளை நான் பின்பற்றுகிறேன். அவரது விருப்பத்துக்கு மாறாக எப்போதும் செயல்படமாட்டேன்.

கட்சியின் சட்டத்திட்டங்களின் அடிப்படையில்தான், கட்சி பொதுச் செயலாளரை தொண்டர்களே தேர்வு செய்ய வேண்டும். அதுவும் முறைப்படி தேர்தல் நடத்தி பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். விரைவில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார்.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்திக்கப் போகிறேன். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் முன்வந்து ஆதரவு தெரிவித்தால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன். ஆளுநர் வந்தவுடன் அவரை சந்திப்பேன். விரைவில் சட்டப்பேரவையை கூட்டுமாறு அவரிடம் அனுமதி கோருவேன். சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எனக்கான ஆதரவை தெரிவிப்பார்கள். சட்டப்பேரவையில் எனது பலம் தெரியும்.

பாரதிய ஜனதா கட்சி என்னை இயக்குவதாக குற்றஞ்சாட்டுவது வடிகட்டிய பொய்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பதவியில் இருப்பவர்களும் என்னை ஆதரிப்பார்கள். இந்த தருணத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு விரைவில் ஸ்திரமான முடிவை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் எனது பலத்தை நிரூபிப்பேன் ” என்றார்.

முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். | படம்: ம.பிரபு

‘சசிகலாவின் இலக்கு சொத்து சேர்ப்பது’

“சொத்து சேர்ப்பது மட்டுமே சசிகலாவின் இலக்கு. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து தனியார் டி.வி. சேனல் ஒன்று தகவல்களை வெளியிடும். தற்போதைய சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு பொறுப்பிலிருந்தும் அவரை அகற்றக்கூடாது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் துணை நிற்பேன்” என முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சசிகலா எழுதிய மன்னிப்புக் கடிதத்தின் நகல் காட்டப்பட்டது. அதில், அவர் தனது பதவி ஆசை இல்லை என்பதை குறிப்பிட்டிருந்தது சுட்டிக் காட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com