ஜெனிவா தீர்மானமே வெளிவிவகார அமைச்சின் பிரதான சவால்! – திலக் மாரப்பன

மனித உரிமைகளுக்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையே வெளிவிவகார அமைச்சுக்குள்ள மிகப்பெரிய சவால் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று (19) தெரிவித்தார். புதிய வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” மனித உரிமைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருக்கிறது. எமது நாட்டுக்கு முதலீடும் சுற்றுலாப் பயணிகளும் அவசியம் என்றால் மனித உரிமைகள் விடயத்தில் நாம் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எமக்கு அனைத்து நாடுகளுடனும் நட்பான உறவே வேண்டும்.

மிகவும் துரதிஷ்டவசமான சந்தர்ப்பத்திலேயே நான் இப்பதவியை பொறுப்பேற்கிறேன், என்றாலும் என்னால் இயன்ற ஆகக்கூடிய பொறுப்புக்களை நான் நிறைவேற்றுவேன்.

இலங்கையின் மனித உரிமைகளுக்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையே வெளிவிவகார அமைச்சுக்குள்ள மிகப்பெரிய சவாலாகின்றபோதும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சர்வதேசத்தை சிறந்த புரிந்துணர்வுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

“நல்லிணக்கச் செயற்பாடுகளை ஓரிரவில் நிறைவேற்ற முடியாது. அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொஸ்னியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் நல்லிணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்றன . நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காகவே நான் இப்பதவியைப் பொறுப்பேற்றுள்ளேன். எனவே அரசாங்கத்தின் கொள்கைகளை நான் நிறைவேற்றுவேன் ” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com