ஜூலையில் சர்வதேச சுற்றுலா மாநாடு நடாத்த அரசு முடிவு

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்காகக் கொண்டு ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் பாசிக்குடாவில் சர்வதேச சுற்றுலா மகாநாடு நடைபெறவுள்ளது.
“சமாதானமும் சுற்றுலாத்துறையும்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த மகாநாட்டின் ஏற்பாடுகள் மற்றும் பாசிக்குடா சுற்றுலா வலயத்தினை அபிவிருத்தி செய்தல் ஆகிய விடயங்களுக்கான விசே கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ஸின் தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, மேலதிக செயலாளர், திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது, பாசிக்குடா சுற்றுலா வலயத்தின் அபிவிருத்தி வேலைகளை இதனுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், உள்ளுராட்சி அமைப்புக்கள் ஜுலை மாதத்தின் முன்னர் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

 இந்த அபிவிருத்தி வேலைகளில் சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ள பகுதிகளின் தரைப்பிரதேசங்களைச் சமப்படுத்துதல், விடுதிகளுக்காக உள்ளக வீதி வலையமைப்புக்களை ஏற்படுத்துதல், வாகனத்தரிப்பிடக் கட்டுமானங்கள், பொது வசதிகளைக் கொண்ட கட்டடத் தொகுதிகளை அமைத்தல், உள்ளக வடிகாலமைப்புத் தொகுதி, பொது மக்கள் பாவனைக்கான பாலம் அமைத்தல், ஹெலிக்கொப்ரர்கள் இறங்குவதற்கான தளங்கள் அமைத்தல், பொது மக்களுக்கான நடைபாதைகள், ஓய்வு அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களை இணைத்ததாக நடைபெறவுள்ள இந்த சமாதானமும் சுற்றுலாத்துறையும் என்ற சுற்றுலாத் துறை சர்வதேச மகாநாட்டில் உலகின் பல நாடுகளிலும் இருந்து 100 தொடக்கம் 125 வரையான முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை கவருவதும், சுற்றுலா வலயத்தினை பிரபலப்படுத்துவதும், மேம்படுத்துவதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com