ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை நாட்டுக்கு அவசியமானதல்ல – உதய கம்மன்பில

ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை நாட்டுக்கு அவசியமானதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை உடனடியாக மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக கூறினார்கள், ஆனால் இதுவரை இந்த அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாக அந்தச் சலுகையை வழங்குமாறு கோரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உத்தியோகபூர்வமற்ற முறையில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பிரதிபலனாக, புதிய அரசியலமைப்பின் மூலம் அதிகாரங்களைப் பகிர்தல், அவசரகால சட்டத்தை நீக்குதல், வடக்கில் தமிழர்களிடம் இருந்து பெறப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றி மீண்டும் அதனை அந்த மக்களுக்கு ஒப்படைத்தல் உள்ளிட்ட, 58 விடயங்கள் அடங்கிய ஒப்பந்தங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டின் சுயாதீனத்தை இழந்து, நாட்டை துண்டு துண்டாக உடைப்பது குறித்து அவதானம் செலுத்தி பெறப்படும் சலுகையை விட, அது இல்லாத இலங்கை சுபீட்சமானது என எமக்குத் தெரிகிறது என்றும், இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு வரலாற்றிலும் 6 வருடங்களுக்கு மட்டுமே குறித்த சலுகை கிடைக்கப் பெற்றதாகவும், இதன்படி சுனாமியின் பின்னர் 2004ம் ஆண்டு வழங்கப்பட்டு 2010 விலக்கிக் கொள்ளப்பட்டது எனவும் கூறிய கம்மன்பில, அந்த சலுகை கிடைக்க முன்னரும் சிறப்பாக இருந்தோம், அதன் பின்னரும் சிறப்பாக இருந்தோம், எனவே ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை இன்றி நாடு செழிப்பாக இருப்பதாகவும் கூறினார்.

ஆகையால் அந்தச் சலுகையின் பெயரில் நாட்டை அடகுவைக்க வேண்டாம் எனவும் கம்மன்பில இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com