ஜனாதிபதி மரணிப்பது நிச்சயம் – என் ஜோதிடக் கணிப்பு பொய்த்தால் தொழிலை விட்டுவிடுவேன் – மீண்டும் மிரட்டும் றோஹன விஜயமுனி

எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும். எனினும் அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் என ஜோதிடர் றோஹன விஜயமுனி மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் ஜனவரி 26 ஆம் திகதி உயிரிழந்து விடுவார் என றோஹன விஜயமுனி என்ற ஜோதிடர் கடந்த வருடம் ஆரூடம் கூறியிருந்தார். இவரின் கருத்து கடந்த வருடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மீண்டும் ஒரு காணொளியை குறித்த ஜோதிடர் வெளியிட்டுள்ளார்.

அக் காணொயிளில் அவர் தெரிவித்துள்ளதாவது,

‘தற்போதைய ஜனாதிபதியின் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது என, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக மூன்று மாத காலத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தேன். நான் அரசியல் இலாபங்களுக்காக இதனை கூறவில்லை. ஜோதிடத்தின் பிரகாரமே இதனைத் தெரிவித்திருந்தேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு அமைச்சு பதவியை வழங்கி அவரே அதனை பறித்துக்கொண்டார். அவருக்கும் எனக்கு எவ்வித உறவும் இல்லை. அவர் என்னுடைய நண்பரும் இல்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவார் என்று கூறியிருந்தேன். அதேபோன்று மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தேன்.

மைத்திரிபால வெற்றி பெறுவார் என கூறியதை ஏற்றுக்கொண்ட உங்களுக்கு ஏன் மைத்திரிபால இறந்துவிடுவார் என்று கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

என்னுடைய கருத்தை ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் எனது பேஸ்புக் பக்கத்தில் உள்ள சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறானர்கள் உடனடியாக எனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

ஜனாதிபதி இம்மாதம் 26 ஆம் திகதி இறந்து விடுவார் என கூறியிருந்தேன். அதற்கான காலமும் நெருங்கி வருகின்றது. ஆனால் ஜனாதிபதி மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

எனினும் தற்போது சனிப் பெயர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி எதிர் வரும் ஏப்பரல் 20 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோம்பர் 26ஆம் திகதி வரை சனிப்பெயர்ச்சி உச்சத்தில் இருக்கும்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் மரணிப்பது நிச்சயமாகும். இதனை ஜோதிட அடிப்படையில் மாத்திரமே கூறுகின்றேன்.

எனவே பத்து மாதங்களுக்கு பின்னர் என்ன நடக்கப்போகின்றது என்று காத்திருந்து பாருங்கள்.

நான் ஆருடம் கூறுவதால் எனக்கு யாரும் பரிசுப் பொருட்களை வழங்குவதில்லை.

நான் கூறியது நடக்காவிட்டால் நான் இனி ஜோதிடம் கூறமாட்டேன். எனவே என்னை திட்டும் நாய்களுக்கு நான் அஞ்சப்போவதும் இல்லை. சிங்கம் எப்போதும் புல் தின்னாது அப்படியானவனே நான்.

யாருக்கும் பயந்தவனும் அல்ல. 10 மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். இந்த மரணம் நடக்கின்றதா இல்லையா என்று. அதன் பின்னர் பார்ப்போம் யார் உண்மையானவர் என்று என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com