சற்று முன்
Home / செய்திகள் / ஜனாதிபதி தேர்தல் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டும் பேச்சுக்கள் தீவிரம்…

ஜனாதிபதி தேர்தல் தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டும் பேச்சுக்கள் தீவிரம்…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரம் பெற்றுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதை தவிர, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகியனவும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டும் முயற்சிகள் பல்வேறு தரப்புக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னதாகவே, தமிழ் மக்கள் பேரவையும் இதற்கான முயற்சியொன்றை தொடங்கியது. இதுதவிர, மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிகளும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும், கொழும்பிலுள்ள சில தரப்புக்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் தரப்பு ஒரே நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், தெளிவான பேரம்பேசலை செய்யலாமென்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.

இதற்காக, தமிழ் மக்கள் பேரவையினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று பங்காளி கட்சிகளின் தலைவர்கள், விக்னேஸ்வரனை சந்தித்து பேசியுள்ளனர். அவர்கள் இந்த முயற்சிக்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்து, சந்தித்து பேசலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும், ரெலோவின் யாழ் பிரதிநிதிகளும் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, இந்த முயற்சி தொடர்பாக சில தினங்களிற்கு முன்னர் கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசினார், நல்லையா குமரகுருபரன். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பு ஓரணியாக செயற்படுவது குறித்த யோசனைக்கு கொள்கையளவில் இரா.சம்பந்தன் இணக்கம் தெரிவித்திருந்தார். தனது பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் பேசிவிட்டு பதிலளிப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

எனினும், அனைத்து தரப்பும் எப்போது, எங்கு சந்திப்பதென்ற இணக்கம் இதுவரை ஏற்படவில்லை.

இதேவேளை, தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வரும்போதும், தனிப்பட்ட சந்திப்புக்களில் கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் தரப்புக்கள், உள்ளூர அதை விரும்பாததால் ஒற்றுமை முயற்சி சாத்தியமாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com