ஜனாதிபதியுடன் சந்திப்பு நிகழ்வில்லை – ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் உண்மையில்லை

கடந்த 19 ஆம் திபதி யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி கட்டிடத் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியுடன் சந்திப்பு நிகழ்ந்ததாக ஜனாதிப ஊடகப் பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினை மறுத்திருக்கும் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவனும் பாடசாலையின் முன்னைய அதிபர் வண.பிரான்சிஸ் யோசப் தொடர்பான பொறுப்புக்கூறலை வேண்டி ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு என பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டவருமான ஆரோக்கியநாதர் தீபன்திலீசன் தாங்கள் ஜனாதிபதியை உரையாட முற்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைவைத்து சந்திப்பு நிகழ்ந்ததாக காட்டமுயற்சித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு கடந்த திங்கட்கிழமை வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோர் உறவினர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் என்று அறிக்கையும் படமும் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்
பிரிவு, தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதற்காகவும் ஜனாதிபதி மீது அவதூறு பரப்புவதற்காகவும் காணாமற்போனோர் உறவினர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவில்லை என திட்டமிட்ட முறையில் விசமிகள் சிலரால் பொய்ச் செய்தி பரப்பப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவனும் பாடசாலையின் முன்னைய அதிபர் வண.பிரான்சிஸ் யோசப் தொடர்பான பொறுப்புக்கூறலை வேண்டி ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு என பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டவருமான ஆரோக்கியநாதர் தீபன்திலீசனை வாகீசம் தொடர்புகொண்டு கேட்டபோது,

நாங்கள் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தோம். நாம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு எவரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை. பொலிஸ் அதிகாரி ஒருவரே எம்மை அழைத்து
எம்மில் மூன்றுபேரை ஜனாதிபதி சந்திக்க விரும்புவதாகவும் சாந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறி எம்மை கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.

எனினும் நிகழ்வு முடியும்வரை ஜனாதிபதியை நாம் சந்தித்திருக்கவில்லை. நிகழ்வு முடிந்தபின்னர் எம்மை அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என்று நாம் நம்பியிருந்தோம். ஆயினும் ஜனாதிபதி செல்லும்பொது எனது கையில் வைத்திருந்த எமது பாடசாலையின் முன்னாள் அதிபரது படத்தினை மட்டுமே ஜனாதிபதியிடம் கையளிக்கமுடிந்தது. உரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. உரையாட முற்பட்டபோது ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் என்னை கையைப் பிடித்து இழுத்தனர். என்னோடு வந்திருந்த அருட்தந்தை சக்திவேலையோ காணாமல் போனோரின் உறவினரையோ ஒருவார்த்தைகூட கதைப்பதற்கு சந்தர்ப்பம்வழங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக சந்திப்பைத் தவிர்த்து ஜனாதிபதி செல்லும்போது தம்மைச் சந்தித்துவிட்டுச் செல்லுமாறு காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர் அவலக் குரல் எழுப்பினார். உடனே பாதுகாப்புப் பிரிவினர் அவரைப் பலவந்தமாக இழுத்துச் சென்று நீண்ட நேரத்தின் பின்னரேயே அவரை விடுவித்திருந்தனர்.

இந்தநிலையில் ஜனாதிபதியுடன் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறி ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையுடன் கூடிய புகைப்படத்தில் என்னை பாதுகாப்பு பிரிவினர் கையினைப் பிடித்து இழுக்க முற்பட்ட காட்சி தெளிவாகத் தெரிவதனையும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com