சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

இரண்டு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கர்நாடகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அப்படியே ஏற்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை; ரூ.10 கோடி அபராதம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவுக்கு பின்னடைவு:

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்துள்ளது. இதன் காரணமாக சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. 4 ஆண்டு சிறைத் தண்டைனையில் ஏற்கனெவே அனுபவிக்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தவிர்த்து எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை உறுதியானதால் சசிகலா இன்னும் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

வழக்கு கடந்து வந்த பாதை:

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கு, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலம், இறுதிவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இறுதியில் 2014, செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார்.

இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015, மே 11-ம் தேதி ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com