சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை – ஐவர் மருத்துவமனையில்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சித்திரவதைக்குள்ளான ஐந்து சிறுவர்கள், சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐந்து சிறுவர்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும், உடலின் பல பகுதிகளிலும் உட்காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்காக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் சென்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று, தனக்கு நிகழ்ந்து சித்திரவதை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தமையைத் தொடர்ந்தே குறித்த விடயம் வெளியில் தெரியவந்துள்ளது.

இதையடுத்தே அதிகாரிகளால் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன் இடம்பெற்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை சிறுவர்கள் வெளியில் தெரிவிக்க அச்சமடைந்து காணப்படுகின்றனர் எனவும் எனவேதான், அவர்களை சிறுவர் இல்லத்திலிருந்து வெளியே எடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவர் இல்லத்தில் யுத்தத்தில் தாய், தந்தை, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும், சிறுமிகளும், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சிறுவர்களும் உள்ளனர்.

போரினால் ஏற்பட்ட பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு உள்ளான சிறுவர்கள், தங்களின் நிலைமையைக் கருதி சிறுவர் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அங்கும் அவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குறித்த சம்பவம் தொடர்பில், சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர்களை வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர், வைத்தியசாலை பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளதோடு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளன​ர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com