சற்று முன்
Home / செய்திகள் / செப்டம்பர் 11- அமெரிக்காவை அதிரவைத்த தாக்குதல் – சிறப்புப் பார்வை

செப்டம்பர் 11- அமெரிக்காவை அதிரவைத்த தாக்குதல் – சிறப்புப் பார்வை

விமானத்தை ஆயுதமாகவும் அதில் நிரப்பப்பட்ட எரிபொருளை வெடிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை உலகம் புரிந்து கொண்ட நாள் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11. மறக்கமுடியாத நாள்.. அந்த நாளில் உலக வல்லரசான அமெரிக்கா அடுத்தடுத்த அதிர்ச்சிகளை எதிர்கொண்டது.
உலக வர்த்தக மையம்…
நாங்கள் சில விமானங்களை வைத்திருக்கிறோம். அமெரிக்க ஏர்லைன்ஸ்11, விமானத்தைக் கடத்திய பயங்கரவாதி அட்டா பயணிகளை எச்சரிப்பதற்காகக் கூறிய சொற்கள் இவை. இதனை தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த அமெரிக்க அதிகாரிகள் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதன் பொருளை உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு நேரமும் இல்லை.
உலக வர்த்தக மைய வளாகத்தின் வடக்குக் கோபுரத்தில் விமானம் மோதிக் கொண்டிருந்தபோது, அந்த விமானம் கிளம்பிய அதே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மற்றொரு விமானமும் நியூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த விமானத்தின் பெயர் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175. பாஸ்டனில் அது புறப்பட்ட நேரம் காலை 8.14 மணி. அந்த நேரத்தில்தான் முதல் விமானம் வானில் கடத்தப்பட்டது. மர்வான் அல் ஷேக் தலைமையிலான 5 பயங்கரவாதிகள் இந்த விமானத்துக்குள் இருந்தனர். இவர்களில் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள், மூவர் சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர்கள். கத்திகள், தடிகள் போன்றவைதான் இவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள். அதனால்தான் விமான நிலைய பாதுகாப்பு சோதனையை இவர்களால் எளிதாகக் கடந்துவர முடிந்தது.
தாறுமாறாக சென்ற விமானம்…
சரியாக 8.46 மணிக்கு விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த நேரத்தில்தான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வர்த்தக மையக் கட்டடத்தின் வடக்குக் கோபுரத்தில் மோதியிருந்தது. விமானம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இருந்து மாறியது. நியூயார்க் நகரை நோக்கிச் செல்லத் தொடங்கியது.
புதிதாக யாரோ வந்து விமானத்தை இயக்குகிறார்கள் என்பதை பயணிகளே புரிந்து கொள்ளும் அளவுக்கு விமானம் தாறுமாறாகச் சென்று கொண்டிருந்தது. விமானிகள் கொல்லப்பட்டிருந்தனர். பணிப் பெண்கள் தாக்கப்பட்டிருந்தனர்.
எனினும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானத்தைப் போலவே இந்த விமானத்தில் இருந்தும் பணியாளர்கள் சிலர் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிந்தவர்களுக்கும் தொலைபேசியில் தகவலைத் தெரிவித்தார்கள். இன்னொரு விமானம் கடத்தப்பட்டுவிட்டது என்பது 8.58 மணிக்கு தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தெரிந்தது.
ஏற்கெனவே ஒரு விமானம் வர்த்தக மையக் கட்டடத்தை தாக்கியிருந்ததால், அந்த நிலைமையைச் சமாளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இப்போது அடுத்த விபரீதத்தைக் காண தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
வெடிபொருளான விமானம்…
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானத்தைப் போல் அல்லாமல் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் முற்றிலும் வேறு பாதையில் நியூயார்க் நகருக்கு இயக்கப்பட்டது. டிரான்ஸ்பான்டர்கள் அணைக்கப்படவில்லை. இதனால் ரேடார்களின் இதனை மிக எளிதாகக் கண்காணிக்க முடிந்தது.
நியூ ஜெர்சி, ஸ்டாடன் தீவு, நியூயார் விரிகுடாக் கடந்து எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை நோக்கிச் சென்ற விமானம் கடைசி நேரத்தில் மிக நேர்த்தியாக வளைந்து வர்த்தக மையத்தை நோக்கி விரைந்தது. வடக்குக் கோபுரத்தில் விமானம் மோதிய பாதிப்பு அடங்காத நிலையில் தெற்குக் கோபுரத்தில் இந்த விமானம் சீறிப் பாய்ந்தது. அப்போது மணி 9.03. 38 ஆயிரம் லிட்டர் எரிபொருள், 5 கடத்தல்காரர்கள், இரு விமானிகள், 7 பணியாளர்கள், 51 பயணிகள், 80 வயதுப் பாட்டி, இரண்டரை வயதுக் குழந்தை என உயிர்களோடு எரிபொருளையும் கலந்து வெடிபொருளானது விமானம்.
2,600 பேர் உயிரிழப்பு…
ஏற்கெனவே மரண ஓலங்களைக் கேட்டுக் கொண்டிருந்த வர்த்தக மைய வளாகத்தில், ஆயிரக் கணக்கானோர் குழுமியிருந்தார்கள். கேமராக்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தன. அவர்களது கண்முன்னே தெற்குக் கோபுரத்துக்குள் புகுந்த விமானத்தின் பாகங்கள், மறுபுறம் வெளியே வந்தன. தொலைக்காட்சிகள் அதை நேரலையாக ஒளிபரப்பின. கட்டடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு கட்டடம் தரைமட்டமானது. இரு தாக்குதல்களிலும் சேர்த்து சுமார் இரண்டாயிரத்து 600 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் மீட்புப் படை வீரர்கள்.
மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், ராணுவமும் உளவுப் படைகளும்கூட வகுக்க முடியாத சதித்திட்டத்தை பயங்கரவாதிகள் வகுத்திருந்தார்கள். எத்தனையோ நாடுகளுக்குச் சென்று கலகம் விளைவித்த அமெரிக்காவை, அதன் சொந்த மண்ணில் ஏமாற்றும் அளவுக்கு அவர்களது திட்டம் துல்லியமாக இருந்தது. அதனால் அமெரிக்காவின் அப்போதைய அச்சம் நியாயமானதுதான்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com