சூரியனில் போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டடோம் – இரா.துரைரெட்ணம் !!

உள்ளூர் அதிகார சபைத் தேர்தலைப் பொறுத்தவரை சூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கும் ஈபிஆர்எல்எவ் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்கட்சிகளும், புத்திஜீவிகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (20.03.2018) செவ்வாய்க்கிழமை அவரால் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில்,

“உள்ளூர் அதிகார சபைத் தேர்தலைப் பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் சூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். இதற்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் பொறுப்பேற்க வேண்டும் விரும்பியோ,விரும்பாமலோ இத்தேர்தலில் நிர்ப்பந்திக்கப்பட்ட நாம் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்ட எமது வேட்பாளர்களின் கடின உழைப்பின் காரணமாக 18 பிரதிநிதிகளை பெறக்கூடியதாக இருந்தது.

ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்பதற்காக நாம் அங்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை அத்துடன் கோறளைப்பற்று வாழைச்சேனை போன்ற பிரதேச சபைகளில் நாம் போட்டியிடவில்லை. இந்நிலையில் அண்ணளவாக 25,000ஆயிரம் வாக்குகளை எடுப்பதற்கு இத்தருணத்தில் எம்மோடு கைகோர்த்து உழைத்த வாக்காளர் பெருமக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும், தேசியக்கட்சிகளும் அதன் அடிவருடிகளும் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளிலும் கனிசமான வாக்குகளைப் பெற்று பலமடைந்ததை நடைமுறையில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதை நன்கு உணர்ந்து எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பலவீனமாகப் போவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் விட்ட தவறுகளைத் திருத்தி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தமிழ்த்தேசியத்தை வளர்க்கவும் பலமடையவைக்கவும் கிழக்கு மாகாணத்திலாவது முன்வர வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் விகிதாசாரம் 40சதவீதமாக இருந்தது தற்சமயம் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஏனைய இனத்தவர்களின் விகிதாசாரம் எமது சமனிலையை தொட்டுவிடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இத்தருணத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல தமிழ்கட்சிகளும் ஒரணியில் நின்று செயற்படுவதற்கான பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும்.

இதன் முதற்கட்டமாக கட்சிகளிற்குள்ள முரண்பாடுகளை மறந்து விட்டுக்கொடுத்து தமிழ்மக்களின் பலத்தை எதிர்காலத்தில் உறுதிப்படுத்துவதற்காக முன்னதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் அனைத்து தமிழ்கட்சிகளையும் உள்ளடக்கி ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு பல தமிழ் கட்சிகளிடம் பேர்ச்சுவார்த்தை நடாத்தியிருந்தோம்.

எனவே எமது கட்சியை பொறுத்தவரையில் எதிர்வரும் காலங்களில் தமிழர்கள் பலவீனமாகப் போவதற்கு உடந்தையாக இருக்கப்போவதுமில்லை. தமிழர்கள் பலவீனமடையும் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கப்போவதுமில்லை. தேசியக்கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து ஆட்சியாளர்களாக இருக்கப்போவதுமில்லை.தமிழ் மக்களுக்கு எதிராகத் தீட்டப்படுகின்ற சதித்திட்டங்கள் என்னவென்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய மாயவலைக்குள் தமிழ்க்கட்சிகள் சென்றுவிடக்கூடாது.

எனவே எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்கட்சிகள், புத்திஜீவிகள்; யாவரும் ஒரு அணியாகச் செயற்பட்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டு வருவதற்கு அரசியற்கட்சிகளின் பிடிவாதம், போட்டித்தன்மைகள், கட்சிமேலாதிக்கம், இனவாதக் கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்தல் குரோதமனப்பான்கு, பிரதேச,சாதிவாதங்கள், ஊழல்மோசடி செயற்பாடுகள், விட்டுக் கொடுக்காமை, நெகிழ்வுப் போக்கின்மை, போன்ற விடயங்களை கைவிட்டு தமிழர்களின் பிரதிநிதித்துவம் கடந்த காலத்தில் குறைந்துபோனது, பலவீனமடைந்தது, இல்லாமல் போனதை அரசிற்கட்சிகளும், புத்திஜீவிகளும் மறந்து விடக் கூடாது.

இனவாத தமிழர்விரோதப் போக்குடைய கட்சிகளுக்கு உள்ளூராட்சி சபையில் ஆதரவளிக்குமாறு கோருகின்ற தலைமைகளும் உள்ளன. இவர்கள் தங்களுடைய கோபத்திற்காக கிழக்கு மாகாணத் தமிழர்களை பிரித்து நலிணப்படுத்தவதற்கு உடந்தைகளாக இருப்பாளர்களானால் மக்கள் எதிர் காலத்தில் நல்ல பாடத்தைப் புகட்டுவார்கள்.

கிழக்கு மாகாண சூழல் என்பது ஒரு வேறுபட்டதாக உள்ளது. தமிழர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே நம் தமிழர்கள் பலமுள்ளவர்களாக வாழ முடியும். தமிழ் மக்கள் கட்சிகள் ஒற்றுமையாக செயல்படவேண்டுமென விரும்புகின்றார்கள் என்பதை கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளுக்கு வாக்களித்ததனூடாக ஒரு நல்ல செய்தியை தெரிவித்திருக்கின்றார்கள்.

எதிர்வரும் காலங்களில் தமிழ்கட்சிகள் பிரிந்திருந்தால் எமது மாவட்டத்தில், எமது மாகாணத்தில் இனவாத கட்சிகள் பலமடையும். பலமடைவதனூடாக தமிழ்இனம் பலவீனமடையும் தற்சமயம் தமிழ் விகிதாசாரம் குறைந்துள்ள நிலையில் தமிழ் இனம் அரசியல் அனாதையாக்கப்படுவார்கள். என்ற செய்தியை வாக்களிப்பினூடாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே தமிழ் இனத்தை பலமடைய வைக்கும் முழுப்பொறுப்பினையும் அரசியற்கட்சிகளும்,புத்தி ஜீவிகளும் கையில் எடுக்க வேண்டும்.

எமது கட்சியைப் பொறுத்தவரையில் மாவட்டரீதியாக தமிழ்மக்களின் நலன் கருதி சில முடிவுகளை எடுப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கு சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. அதன் அடிப்படையில் மாட்ட ரீதியாக சில ஆலோசனைகளை நாங்கள் கட்சிகளுக்கு முன் வைத்திருக்கின்றோம்.

தமிழர்கள் பலவீனமாகப் போவதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய செயற்திட்டங்களை நாங்கள் வகுத்து இருக்கின்றோம். இதை விடுத்து ஒருசில தலைவர்கள் கிழக்கு மாகாண மக்களின் நலன் பாராது கட்சி நலன் மட்டும் பார்த்து வக்கிரத்தன்மையுடன் தவறான அறிக்கைகளை விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒற்றுமையே எமது பலம் கிழக்கு மாகாண தமிழர்கள் பலமாக வாழ்வதற்கு ஒன்று பட வருமாறு அறைகூவல் விடுக்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com