சுற்றிவளைப்பில் கைதான மகன்கள் குறித்து தகவலில்லை

அல்லைப்பிட்டி சுற்றிவளைப்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 600 பேருடன் கொண்டு சென்ற எமது மூன்று மகன்களை காணவில்லை என பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், அல்லைப்பிட்டியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 8ம் மாதம் 25ம் திகதி எமது பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து எம்மை ஒருஇடத்திற்கு அழைத்து சென்று அனைவரையும் ஒன்றாக கூட்டினர். அங்கு 14 வயது முதல் 45 வயது வரையிலான அனைவரையும் வேறாக நிற்குமாறு கூறி அவர்களை வேறு படுத்தி அவர்களில் 600 பேரை இராணுவத்தினர் அழைத்து சென்றனர். எம்மை மண்கும்பான் பாடசாலையில் தங்க வைத்தனர். அவ்வாறு அழைத்து சென்றவர்களில் எமது மூத்த மகனை தவிர ஏனைய இரு மகன்மார்களை விடுவித்தனர். மூத்த மகன் எங்கே என கேட்ட போது அவர் இராணுவத்தில் வேலைக்கு இணைந்துள்ளார் என கூறினார்கள். பின்னர் ஒரு நாள் எங்கள் அனைவரையும் அல்லைப்பிட்டியில் ஒன்று கூடுமாறு அழைத்து அங்கே இராணுவ தளபதி லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ உங்கள் அனைவரின் பிள்ளைகளையும் உங்கள் தலைவர் விரைவில் விடுவிப்பார் என கூறினார். 
நாம் யார் எங்கள் தலைவர் என கேட்ட போது டக்ளஸ் தேவானந்தா என கூறினார். பின்னர் ஒரு நாள் டக்ளஸ் தேவானந்தா , கொப்பேக்கடுவ ஆகியோர் கூட்டம் கூடி இனி இராணுவ சுற்றிவளைப்பின் போது எமது ஆட்களும் இராணுவத்தினருடன் இணைந்து வருவார்கள் என டக்ளஸ் தேவானந்தா கூறினார். அவர் அவ்வாறு கூறி சென்று ஒன்பதாவது நாள் மீண்டும் எமது கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது. அந்த சுற்றிவளைப்பில் எனது இரு மகன் மாரையும் இராணுவத்தினர் கொண்டு சென்றனர். கொழும்பில் 91ம் ஆண்டு 6ம் மாத கால பகுதியில் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து எமது மூன்று மகன் மாரையும் விடுதலை செய்ய கோரினோம். அதற்கு அவர் விரைவில் விடுதலை செய்வோம் என கூறினார். 
பின்னர் ஒரு நாள் திருகோணமலையில் இராணுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் ஒருவர் நாவற்குழி பகுதியில் வசிப்பதாக அறிந்து அவரிடம் சென்று விசாரித்தோம். அதன் போது அவர் கூறினார் நீங்கள் சொல்லும் கால பகுதியில் யாழ்ப்பணத்தில் இருந்து 80 பேரை பச்சை கலர் ரி.சேர்ட் மற்றும் பச்சை கலர் அரைக் காற்சட்டை ஆகியவற்றுடன் அழைத்து வந்து எமது திருகோணமலை முகாமில் ஒரு நாள் இரவு தங்கவைத்து உணவு கொடுத்து விட்டு மறுநாள் காலை கொழும்புக்கு கப்பல் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். என கூறினார். உடனே நாம் எமது பிள்ளைகளின் படத்தை காட்டி இவர்களை அதில் கண்டீர்களா என கேட்ட போது இவர்கள் தான் என உறுதியாக சொல்ல மாட்டேன் இவர்ககள் வயதை ஒத்தவர்கள் தான் அழைத்து வரப்பட்டனர் என கூறி எமது வீட்டு விலாசத்தில் எழுதி வாங்கி தமக்கு மேலதிக தகவல் தெரிந்தால் அறிவிப்பதாக கூறினார். 
அதன் பின்னர் அவர் ஒரு நாள் கடிதம் அனுப்பி இருந்தார். அன்றைய தினம் திருகோணமலை முகாமுக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பெயர் விபரம் உள்ளடக்கி அதில் எனது மூன்று மகனும் சகோதரியின் மூன்று மகனுடைய பெயர்களும் காணப்பட்டன. அதன் பிறகு சந்திரிக்கா ஜனாதிபதி ஆனவுடன் காணமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என ஒரு குழுவை அமைத்து இருந்தார். அந்த குழுவின் முன்பாக சாட்சியம் அளித்து திருகோணமலை முகாமில் ஒரு நாள் இரவு தங்க வைத்து இருந்தவர்களின் பெயர் விபரத்தை கொடுத்தோம். அதனை பார்த்து விட்டு அந்த குழுவினர்கள் கூறினார்கள் உங்கள் பிள்ளைகளை டக்ளஸ் தேவானந்தா தான் பிடித்து வைத்து உள்ளார். என கூறினார்கள். 
அதன் பின்னர் 2001ம் ஆண்டு 6ம் மாத கால பகுதியில் ஈ.பி.டி.பி.யை சேர்ந்த மகேஸ்வரி வேலாயுதம் அவர்களை சந்தித்து பிள்ளைகளை பற்றி கேட்டோம். அதற்கு அவர் கூறினார் தீவகத்தில் அக் கால பகுதியில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் இராணுவத்தில் வேலைக்கு இணைந்து உள்ளதாகவும் சில தமது அமைப்பில் இணைந்து உள்ளதாகவும் கூறினார். ஆனால் உங்கள் பிள்ளைகளை பற்றிய தகவல் இல்லை எனவும் தான் தலைவருடன் கதைத்து விட்டு கூறுகின்றேன் என கூறினார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை அதன் பின்னர் மகன்மார் பற்றிய எந்த தகவலும் இல்லை என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com