சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – இரா சம்பந்தன்

(24.08.2015) தேசியப் பட்டியல் நியமனங்கள் குறித்து கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவை விமர்சித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மிகவும் ஆழமாக சிந்தித்து விவாதித்த பிறகே கூட்டமைப்பின் சார்பில் துரைரட்ணசிங்கம் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோருக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிறேமச்சந்திரன் தமிழரசுக் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். அவ்விடையம் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 வட மாகாணத்துக்கான இடத்தை முடிவு செய்யும்போது யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து உறுப்பினர்கள் அங்கு தேர்வாகியுள்ள நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆறாவது இடத்தை தவற விட்டவரை புறந்தள்ளி அவருக்கும் குறைவான வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இடமளிப்பது குறித்து பல கேள்விகள் எழுந்ததாகக் குறிப்பிட்டுள்ள சம்பந்தன்  சில கொள்கைகளின் அடிப்படையிலேயே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு ஒவ்வொரு இடங்கள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது என்றும், கூட்டமைப்பின் சார்பில் பெண் ஒருவர் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் எனறும் முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.
குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே சாந்தி தோல்வியடைந்திருந்தார் என்பதும், யாழ் தேர்தல் மாவட்டத்தைக் காட்டிலும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்த அளவுக்கே கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர் என்பதும் அவரது தேர்வுக்கு ஒரு காரணம் என்கிறார் சம்பந்தர்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களிலேயே மிகக் குறைவான உறுப்பினர்கள் தேர்வானாதால் அப்பகுதிக்கு ஒரு இடம் வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com