சுயம் தொலைக்கின்றதா ஈழ சினிமா? – ஓர் ரசிகனின் மடல்

Vakeesam # Cinema‘ஈழ சினிமா’ வளர்ச்சியடைய வேண்டும் என நினைக்கின்ற சாமானிய ரசிகன் நான். எமக்காக ஒரு சினிமா, எம் மொழி வழக்கில் ஒரு சினிமா, எம் பிரச்சனைகள் – கதைகளைப் பேச ஒரு சினிமா, எம்மவர்கள் தொழில்வாய்ப்பைப் பெற ஒரு சினிமா, நாங்கள் உலக அரங்கில் கொடி நாட்ட ஒரு சினிமா வளர வேண்டும் என்ற ஆதங்கத்தில் இந்த கடிதத்தை / கட்டுரையை எழுதுகின்றேன்.

ஈழ சினிமாவை விமர்சிப்பது, கத்தி மேல் நடப்பது போன்றது. படைப்பாளிகளையும் அதிகம் நோகடிக்கக்கூடாது. அதேநேரம், அவர்கள் விடும் பிழைகளையும் சுட்டிக்காட்டத் தான் வேண்டும். சுட்டிக்காட்டாதவிடங்களில், அவர்கள் தொடர்ந்தும் அதே தவறைச் செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். திருந்துவதாகத் தெரியவில்லை.

2009 இற்கு முன், பின் என இரண்டு பாகங்கள் எமது ஈழ சினிமாவிற்கு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அந்த ‘முன்’ பகுதியை விட்டு விடுங்கள். 60, 70 களைக் கடந்து ‘நிதர்சனமும்’ தாண்டி நிற்கின்றது அப்பரப்பு. ‘அன்று அப்படிச் செய்தார்கள்’, ‘அவர்கள் அப்படிச் செய்தார்கள்’, ‘போரால் எங்கள் சினிமா வளரவில்லை’… இந்தக் கருத்துக்களையும் விட்டுவிடுவோம். 2009 பின்னரான, இப்பொழுது நாம் கண்டு கொண்டிருக்கும் சினிமா பற்றிப் பேசுவோம்.
எமக்கான சினிமாவுக்கான ஒரு வரையறை இல்லை. வரையறுக்கவும் யாரும் இல்லை. அதனால், தறிகெட்ட மாடுகள் போல் ஓடித்திரிகின்றனர் படைப்பாளிகள். அவரவர்க்கு தாங்கள் செய்வது சரி என்றே படுகின்றது. அதனால் செய்கிறார்கள். இன்று இதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருமே, ஏதோவொரு விதத்தில் இலங்கையில், தமிழ் பேசும் சமூகத்திற்கு என்று தனியாக ஒரு சினிமா தேவை என்ற கோணத்திலேயே தங்கள் சினிமா முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றார்கள். தொடர்ந்து செல்கிறார்கள். எனவே, அவர்கள் மீது நக்கல், நையாண்டி, வசவுகளைத் தவிர்த்து விடுவோம்.

ஆனால், தமிழ் பேசுகின்றோம் என்ற ஒரே காரணத்திற்காக தென்னிந்திய சினிமாவைத் தான் நாங்கள் பிரதியீடு செய்யப் போகின்றோமா? என்பதை படைப்பாளிகள் அனைவரும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். பிரதியீடு செய்யத் தான் போகின்றீர்கள் என்றால், உங்களால் ஒரு எல்லையைத் தாண்டி போக முடியாது. உங்களால் அவர்களுடன் போட்டி போட முடியாது. உங்களால் சினிமாவில் ஜெயிக்க முடியாது. ‘முடியாது’ என்கின்ற வார்த்தை உங்களுக்கு அமங்கலமாகத் தோன்றலாம். ‘முடியாது என்று ஒன்றுமே இல்லை’ என உங்கள் பக்கத்தை நியாயப்படுத்தலாம். ஆனால், அது தான் உண்மை. உங்களால் முடியாது. முடிந்தால் முயலுங்கள். ஜெயித்தால் சந்தோசமே!

பேசுவது தமிழானாலும் எங்களுக்கென்று ஒரு மொழி இருக்கின்றது. அது எங்கள் நாட்டிலும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றது. எங்களுக்கென்று கலாசாரம், எங்களுக்கென்று சமூகம், எங்களுக்கென்று பிரச்சனைகள் இப்பிடி ஆயிரமாயிரம் களங்களில் ஆயிரமாயிரம் கதைகள் பொதிந்து கிடக்கின்றன. இவை எல்லாமே உங்களுக்கு பழசாக இருக்கலாம். ஆனால், சர்வதேசத்திற்கு புதிது. உங்கள் படங்களுக்கு சர்வதேசம் கை கொடுக்கும். அமெரிக்கா, சீனா என பல்வேறு நாடுகள் வேற்று நாடுகளுகளின் படங்களையும், படைப்பாளிகளையும், அவர்களின் திறைமைகளையும் ஊக்குவிக்க இருக்கின்றார்கள். உங்கள் கதைகளை சர்வதேசம் அங்கீகரிக்கும். அதன் மூலம் நீங்கள் புகழின் உச்சியை அடையலாம். அது பற்றியெல்லாம் எங்கள் படைப்பாளிகள் சிந்திப்பதில்லை. சிந்திப்பதற்கு நேரமும் இல்லை.

இன்று இந்த சினிமா முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நம்மவர்களில் அநேகர் ‘பிரதியீடு’ பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமக்கான சினிமாவைத் தேடிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து பரிகசிக்கின்றனர். எமக்கான சினிமாவை வளர்க்க வேண்டும் என்ற ரீதியில் விமர்சனங்களை வைப்பவர்கள் மீது, ‘நீ முடிட்டு இரு’ என்பது போன்ற கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஆனால், இவர்களில் பலர் எமக்கான சினிமாவின் வளர்ச்சிக்கு ‘சுயம்’ முக்கியம் உணர்கிறார்கள் இல்லை. அவர்கள் உணரும் சந்தர்ப்பத்தில் எமது சினிமா இன்றிருக்கும், அந்த தவளும் நிலையிலேயே இருக்கும். ஏனெனில், எங்களுக்கொன்று ஒன்றுமே இல்லை. உருவாக்கவும் இல்லை.

சுயம் தொலைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்கள் இருப்பைத் தொலைக்கின்றோம் என்பது தான் உண்மை.

‘குறும்படங்கள் தான் எமது சினிமாவுக்கான வளர்ச்சிப்படி, இது எமக்கான பரீட்சார்த்த காலம். அதிகமான குறும்படங்கள் வரவேண்டும்’ என நீண்ட கால சினிமா செயற்பாட்டாளர் ஒருவருடன் கதைத்த போது கூறினார். ஆனால், 2, 3 வருடங்களாக இருந்த குறும்பட அலை இப்பொழுது ஓய்ந்து விட்டது. இப்பொழுது எடுக்கின்றவர்களில் அநேகர் முழு நீளத்திரைப்படங்களையே எடுக்கின்றார்கள். நான், நினைப்பதுண்டு ‘அப்படியானால், எமது சினிமா வளர்ந்து விட்டதா?’ என்று. வளர்ந்திருக்கலாம். படங்கள் வெளியிட்ட பின், ரசிகர்கள் கூறுவார்கள் தானே முடிவை. அப்பொழுது பார்க்கலாம். ஆனால், ‘எமது’ சினிமா வளர்ந்தாலும், ‘எமக்கான’ சினிமா வளராது.

‘அப்படியானால், போரைக் காட்டினால் தான் எமக்கான சினிமாவா?’ என நீங்கள் கேட்கலாம். எமது கதை பேசும் எல்லாமே எமது சினிமா தான். ஆனால், 30 வருட காலம் போர் நடந்த பூமியில் போரின் தாக்கம் இல்லாமல் படம் எடுப்பதென்பது குதிரைக் கொம்பு. அது மட்டுமல்ல, போர் – போரின் தாக்கம் பற்றிப் பேசினால் தான், எமக்கான தனித்துவத்தை தொடர்ந்து பேண முடியும் என்பது என் கருத்து.

எமக்கான சினிமாவிற்காக இன்று சிலர் முயன்று கொண்டிருக்கின்றார்கள் சிலர் முயற்சி செய்ய நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், வாய்ப்புக் கிடைக்கும் அநேகர் சுயத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ‘கதை’ என்ற ஒன்று பற்றி யாருமே சிந்திக்கிறார்கள் இல்லை. கதை தான் ஒரு படத்தின் நாயகன் என்று கூற தெரியாதவர்கள் எல்லாம் படைப்பாளிகளா? என்ற கோபம் தான் பொத்துக் கொண்டு வருகின்றது.

ஈழ சினிமாவின் அண்மைய போக்குகள் பற்றி நிறையவே எழுதலாம். ஆனால், இங்கு நான் எழுதிய விடயங்களை கூட ஏற்கும் மனநிலையில் பலர் இருக்கப் போவதில்லை. எனவே, அவர்களின் பின்னூட்டல்களைப் பார்த்து மிகுதியைத் தொடரலாம். வாய்ப்புக்கு நன்றி.

‘உன் அடையாளம் தொலைந்தால் மெதுவாக அழிவாய்’

கனகு கரிகாலன்
01.07.2016

இப் பதிவு தொடர்பான உங்கள் கருத்துக்களை கட்டுரையாக பதிவு செய்யவிரும்பின் vakeesamnews@gmail.com இற்கு எழுதி அனுப்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com