சுமந்திரனும் கூட்டாக சேர்ந்து சிறுபான்மை மக்களின் மனங்களை நோகடித்து விட்டார்!

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும், அதை கொண்டுவர தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்டிப்பதன் மூலம் சமசமாஜ கட்சியை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்தினவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனும் இந்த நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக இளைஞர் இணையத்தின் வாராந்திர கலந்துரையாடடில் இதுபற்றி கருத்து கூறிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

இந்த இருவரில் ஜயம்பதி விக்ரமரத்தின எம்பி, என். எம். பெரேரா, கொல்வின் ஆர் டி சில்வா, பெர்னாட் சொய்சா ஆகிய புகழ் பெற்ற இடதுசாரி தலைவர்களை கொண்டிருந்த கட்சியை அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே ஒரு உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் எம்பி, இந்நாட்டு வரலாற்றில் சொல்லொணா துன்பங்களை சந்தித்து, இன்னமும் தீர்வில்லாமல் தவிக்கும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் உடன்பிறப்புகளால் பாராளுமன்றத்துக்கு அனுப்பட்ட பதினாறு தமிழ் எம்பிக்களில் ஒருவர்.

சட்டத்தரணிகளான இந்த இருவரும், இன்று தாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதை மறந்து சட்டத்தரணிகள் என்பதை மாத்திரம் மனதில் கொண்டு செயற்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேவேளை பாராளுமன்றத்தையும் நீதிமன்றமாக எண்ணி செயற்படுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த சந்தேகங்கள் சிதறி வாழும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் பத்தொன்பது நாடாளுமன்ற உறுபினர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பதை இவர்கள் இருவரும் சரிவர புரிந்துக்கொள்ள வேண்டும்.

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது நாம் கொண்டுவந்த திருத்த யோசனைகளினால், நமது கட்சிகள் தேசியரீதியில் நன்மதிப்பை இழந்துவிட்டன என்று சொல்லும் ஜயம்பதி விக்ரமரத்தின எம்பி, இடதுசாரி கட்சிகள் தொடர்பில் இந்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் எப்போதோ நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

எம். ஏ. சுமந்திரன் எம்பி, தான் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு விடுதலை இயக்க தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதி என்பதை மனதில் கொள்ள வேண்டும். பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை மாத்திரம் உறுதி செய்ய விரும்பும் இனவாதிகள் மத்தியில் நாம் நன்மதிப்பை இழந்துவிடுவதையிட்டு நாம் கவலைப்பட போவதில்லை.

ஆனால், நல்லெண்ணம் கொண்ட பெருந்தொகையான சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் இன்று எம்மை புரிந்துக்கொண்டு விட்டார்கள் என்பதை இந்த இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கம் நாம் போராடி உருவாக்கிய அரசாங்கம். தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய எங்கள் கட்சிகளை சார்ந்த நான்கு அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கிறோம். பெருந்தொகையான ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருக்கிறோம். பதினெட்டு எம்பிக்கள் இருக்கிறோம்.

எனவே இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய கரிசனை எமக்கு இருக்கிறது. அதை நாம் செய்கிறோம். மகிந்த ராஜபக்ச அணி மீண்டும் அரங்கேற நாம் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். அதேவேளை, நாம் பிரதிநிதித்துவம் செய்யும் சிதறி வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை பலியெடுக்கும் எந்த ஒரு தேர்தல்முறை ஏற்பாட்டுக்கும் நாம் இடங்கொடுக்க மாட்டோம்.

இது இரண்டையும் ஒருசேர செய்திடும் ஆளுமையும், அறிவும் எமக்கு இருக்கிறது. இதுபற்றி எமக்கு அறிவுரை கூறுவதை விடுத்து விட்டு ஜயம்பதி விக்ரமரத்தின, எம். ஏ. சுமந்திரன் ஆகிய இரண்டு எம்பிக்களும் தங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களினதும், கட்சியினதும் எதிர்பார்ப்புகளை வென்றெடுப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com