” சுதந்திரத்தை நினைவுகூறும் இந்நாளில், நமக்கு முன்னால் இரண்டு தேசிய கடமைகள் இருப்பதனை மறந்து விடக்கூடாது”

நமது நாட்டின் 68வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்ற நம் முன்னால் இரண்டு தேசியக்கடமைகள் இருக்கின்றன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் நல்லாட்சி மாற்றத்தினை இல்லாதொழிப்பதற்கு முயற்சிக்கும் இனவாத சக்திகளை தோற்கடிப்பது அதில் ஒன்றாகும்.மற்றையது நாட்டில் உண்மையான நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கேற்ற ஒரு புதிய அரசியல் யாப்பை ஏற்படுத்திக்கொள்வதாகும்.இவ்வாறு NFGGயின் தவிசாளர் பொறியியளாலர்அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.


 நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப்பிராந்திய காரியாலயம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வு நேற்றுக் காலை NFGG காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் NFGGயின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட், பிராந்திய செயலாளர் MCM ஜவாஹிர் ஆசிரியர், மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் விஷேட உரை ஒன்றினை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது
இன்று நம்நாட்டின்  68வது சுதந்திர தினத்தை நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த தினமானது, வெளிநாட்டு காலனித்துவ சக்திகளிடமிருந்து இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொண்ட வரலாற்று நிகழ்வைக்குறிக்கிறது. அது போல இந்த நாட்டிற்கு இன்னுமொரு சுதந்திரமும் அண்மையில் கிடைத்தது.இந்த நாட்டை படு மோசமாக ஆட்சி செய்து கொண்டிருந்த உள்ளுர் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்ததன் மூலம் கிடைத்த சுதந்திரமே அதுவாகும். கடந்த வருடம் ஜனவரி 8ம் திகதி அந்த சுதந்திரம் நமக்கு கிடைத்தது.
இன்றைய சுதந்திர தின நிகழ்வை சந்தோஷமாக அனுஸ்டித்துக்கொண்டிருக்கும் நம் முன்னால் இரண்டு பெரிய தேசியக்கடமைகள் இருக்கின்றன. அதிலொன்று ஜனவரி 8ம் திகதி பெற்றுக்கொண்ட அந்த சுதந்திரத்தினை இல்லாதொழிக்க பாடுபட்டு வரும் இனவாத சக்திகளையும் அவர்களது முகவர்களையும் தோற்கடிப்பதாகும். இந்த நல்லாட்சிக்கான ஆட்சி மாற்றம் என்ற சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக பொதுவாக நமது நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களும் அனுபவித்து வந்த அடக்கு முறைகளையும் துயரங்களையும் அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது.அந்த அடக்கு முறைகளிலிருந்து மீண்ட ஒரு சுதந்திர உணர்வை நாம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாம் உணர்ந்தும் அனுபவித்தும் வருகிறோம். 


 தற்போதைய ஆட்சி முறைமையை முழுமையான நல்லாட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும் ,அதை நோக்கிய மாற்றங்களையும், நகர்வுகளையும் நாம் மெல்ல மெல்ல கண்டு வருகிறோம். இது நமது தேசம்எனும் உணர்வு எல்லாக் குடிமக்களுக்குள்ளும் இதயபூர்வமாக ஏற்பட்டு வருகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளும் நம் நாட்டை புதிய தேசமாக கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளை இந்த நல்ல மாற்றங்களை இல்லாதொழித்து இந்த நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் தள்ளுவதற்கான சதி முயற்சிகளை இனவாத சக்திகளும் அவர்களது முகவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
 பொதுபல சேனாவின் வேலைத் திட்டங்கள்  தற்பொழுது சிங்ஹலேஅமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய கீதத்தை இந்த நாட்டின் மற்றொரு தேசிய மொழியான தமிழில் பாடக்கூடாது என்று அதனை தேசிய பிரச்சனையாக மாற்றி வருகின்றனர்.ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அதனை தடுத்து நிறுத்த சதி செய்கிறார்கள். எனவே இந்த இனவாத சக்திகளை மீண்டும் தலைதூக்க விடாமல் அவர்களைத் தோற்கடித்து இந்த நாட்டைப் பாதுகாப்பது நமது முன்னாலுள்ள முதலாவது தேசியக் கடமையாகும்.


 அது போலவே இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சியை நோக்கிய மாற்றங்களை நிறுவன மயப்படுத்தி, நிரந்தரமாக்கி ஜனநாயகமும் சமூக நல்லிணக்கமும் நிறைந்த தேசமாக நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. அதற்கேற்ற ஒரு புதிய அரசியல் சாசனம் தேவை என்பதை இன்று எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். சகல மக்களும் பங்குதாரர்களாக இருந்து சகலரினதும் நலன்களையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தத் தக்கதாக ஒரு அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியது நம் முன்னால் உள்ள இரண்டாவது தேசியக்கடமையாகும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com