சுதந்திரக் கட்சியை ஒரு பலமான கட்சியாக முன்னெடுத்துச் செல்வேன் – ஜனாதிபதி

எத்தகைய தடைகள், கஷ்டங்கள் வந்த போதும் அவற்றைத் தாங்கிக்கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒரு பலமான கட்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கட்சியின் தலைமைத்துவத்தை தான் பலவந்தமாகவன்றி எல்லோருடையவும் விருப்பத்துடனேயே பெற்றுக்கொண்டதாகவும், கட்சியில் சீர்திருத்தங்களைச் செய்து அதனை முன்கொண்டு செல்கையில் பல்வேறு தடைகள் முன்வைக்கப்படுவதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பெரிதும் விரும்பும் தான் அத்தடைகளுக்கு முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்று (23) பிற்பகல் அம்பலாங்கொடை தர்மாசோக மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அம்பலாங்கொடைத் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இன்று செய்ய வேண்டியது கட்சியை இரண்டாக உடைத்து நாளை அல்லது நாளை மறுநாள் புதியதோர் அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிப்பதை விடுத்து, சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தி ஒரு பலமான கட்சியாக அதனை முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றிணைவதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவது புதிய ஒரு அரசாங்கம் அல்ல என்றும் மக்களுக்குத் தேவைப்படுவது அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாகும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் நிகழ்ச்சி நிரலை இரண்டாவது இடத்தில் வைத்துவிட்டு நாட்டின் நிகழ்ச்சி நிரலை முதலிடத்தில் வைத்து மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது எல்லோருடையவும் பொறுப்பாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஒரு சிறந்த அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கு ஒரு சிறந்த கட்சி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒரு தூய்மையான அரசியல் கட்சியாக கட்டியெழுப்ப வேண்டும் என்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது அபேட்சகரான தனது வெற்றிக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது அப்போதைய உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மேற்கொண்டுவந்த பாரதூரமான ஊழல் மோசடிகளாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டை கூறுபோடும் ஈழக் கோசத்தை முறியடித்து எல்லோரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு நிலையான நாட்டைக் கட்டியெழுப்பி எமது மரபுரிமைகளைப் பாதுகாத்து நாட்டை பொருளாதார ரீதியாக சுபீட்சமடையச் செய்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெறச்செய்யும் வகையில் காலியில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவமிக்க மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சகல கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, அமைச்சர் சந்திம வீரக்கொடி, பிரதி அமைச்சர் மனுஷ நானயக்கார, பியசேன கமகே, குணரத்ன வீரகோன், சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com