சற்று முன்
Home / செய்திகள் / சுட்டுக் கொல்லும் போது கொதிநிலை அடைபவர்கள் வீதி விபத்து மரணங்கள் குறித்து கரிசனை கொள்வதில்லை

சுட்டுக் கொல்லும் போது கொதிநிலை அடைபவர்கள் வீதி விபத்து மரணங்கள் குறித்து கரிசனை கொள்வதில்லை

வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எவரும் கரிசனை கொள்வதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஒரு வருட காலத்திற்குள் 68 உயிரிழப்புக்கள் வீதி விபத்தினால் ஏற்பட்டு உள்ளது. இந்த வருட ஆரம்பம் முதல் கடந்த நான்கு மாதங்களுக்குள் 16 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆனால் அவை தொடர்பில் பெரிதளவில் எவரும் கரிசனை கொள்ளவில்லை.

கடந்த காலங்கள் போன்று உயிரிழந்த 68 பேரும் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இருந்தால் , இன்று வடக்கில் எவ்வாறான கொதிநிலை காணப்பட்டு இருக்கும். ஆனால் அவர்கள் விபத்தில் உயிரிழந்தமையால் எவரும் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை.

அரச திணைக்கள வாகனங்கள் அதிவேகத்தில் பயணிக்கின்றன.

வீதிகளில் அரச திணைக்கள வாகனங்கள் அதிவேகத்தில் பயணிக்கின்றன. அவை வேக கட்டுபாடுகளை கவனத்தில் எடுப்பதில்லை. எத்தனையோ அரச திணைக்கள வாகனங்கள் வீதி விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றினை மூடி மறைத்து அந்த வாகன சாரதிகள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.

எனவே முதலில் அரச திணைக்கள வாகனங்கள் வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொலிசார் கையூட்டு வாங்கு கின்றார்கள்.

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு பொலிசாரும் தவறி விடுகின்றார்கள். பொலிசார் வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக கண்டி வீதியில் தொடர் வெள்ளை கோட்டில் வாகனங்களை மறிக்கின்றார்கள். அதனால் பின்னால் வரும் வாகனங்கள் பொலிசாரின் கண் முன்னாலே வெள்ளை கோட்டை தாண்டி செல்கின்றனர்.

மற்றம் பொலிசார் கையூட்டுக்கள் வேண்டுவதும் அதிகம். சில இடங்களில் போக்குவரத்து பொலிசாரின் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருக்கும் பெட்டியின் மூடி திறந்தே இருக்கும். சாரதிகள் உண்டியல் போன்று அதற்குள் பணத்தினை போட்டு விட்டு செல்கின்றார்கள். எனவே இவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாகவே வீதி விபத்துக்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com