சுகாதார திடக்கழிவு நிலநிரப்புத் திட்டம் கீரிமலையில் அமையவுள்ளது

கீரிமலையில் சுண்ணாம்புக்கல் அகழ்வால் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியைக்கொண்ட பிரதேசத்தில் சுகாதாரமான திடக்கழிவு நிலநிரப்புத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (06.09.2016) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கும்,பிரதேசசபை செயலாளர்களுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கலந்துரையாடலில் கொழும்பில் இருந்து வருகைதந்திருந்த மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிநிதிகள் விளக்கங்களை வழங்கியிருந்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன்போது, யாழ் குடாநாட்டில் அன்றாடம் மலைபோல் குவியும் திண்மக் கழிவுகளின் பிரச்சினைகளுக்குக் கீரிமலையில் அமையவுள்ள நிலநிரப்புத்திட்டம் ஒரு தீர்வாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசசபைகளின் ஊடாகச் சேகரிக்கும் திண்மக் கழிவுகளில் இருந்து உக்கக்கூடிய கழிவுகளும், மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்ரிக் கழிவுகளும் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் எஞ்சிய திடக்கழிவுகளே கீரிமலைக் குழியில் நிரப்பப்பட உள்ளது. தினமும் 50 தொன் கழிவுகள் என்ற அடிப்படையில் 15 வருடங்களில் இந் நிலநிரப்புத்திட்டம் முடிவுக்கு வரும்.
கழிவுகளினால் நிலத்தடிநீர் மாசடையாமல் இருப்பதற்காகக் கற்குழியின் அடிப்பகுதியில்செயற்கைத் தரைவிரிப்பு மற்றும் பென்ரோனைற் களியினால் மூன்று அடுக்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.இத்திட்டத்துக்கு கொரிய அரசாங்கம் 34 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இலங்கை அரசாங்கம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்க உள்ளது. 2018ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராஜா,மாகாணசபை உறுப்பினர்கள் க.சிவாஜிலிங்கம், அ.பரஞ்சோதி, க.சர்வேஸ்வரன், கி. அகிலதாஸ்,நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்துக்குட ஆராச்சி, திடக்கழிவகற்று வசதிகள் திட்டத்தின் இயக்குநர் சறோஜினி ஜெயசேகரா, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வடமாகாணப் பணிப்பாளர் எம்.ஏ.சி. நஜீப், பிரதிப்பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார்,வடக்கு விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன்ஆகியோருடன் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.03 05 06 08 09

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com