சில வேட்புமனுக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன?

உள்ளாட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு சில அடிப்படை காரணங்கள் தாக்கம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இறுதிச் சந்தர்ப்பத்தில் வேட்புமனுக்களை கையளித்தல், உரிய அவதானம் செலுத்தாமை மற்றும் சுபநேரத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய திட்டமிடல் என்பன இதற்கு காரணமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளாட்சி மன்றங்களுக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம், நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால், ஆறு உள்ளாட்சி மன்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியினால், அம்பாறை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்களும், சில சுயாதீன கட்சிகள் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதேவேளை, எஞ்சியுள்ள 248 உள்ளாட்சி மன்றங்களுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் அனைத்து நிறுவனங்களிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேலதிக சேவைகள் முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயாதீன குழுவோ, அவசியமேற்படின், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு முன்னர், வேட்புமனுக்கள் உரிய முறையில் தயார்செய்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

எனினும், சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அந்த ஆலோசனையைக்கூட கருத்த்திற்கொள்ளாமல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com