சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து கதைப்பது இனவாதமல்ல

சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து கதைப்பதை சில பெரும்பான்மை தேரர்களும் அரசியல்வாதிகளும் இனவாதமாக சித்தரிக்க முயல்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

எமது மக்கள் எமக்கு வாக்களித்து எம்மீது பொறுப்புக்களை சுமத்தியிருப்பது அவர்களின் உரிமைகளுக்கும் தேவைகளுக்கும் குரல் கொடுக்கவேயன்றி வேறு எதற்கும் இல்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் இனவாதம் பேசுவதை விடுத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டுமென அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

நாம் அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்பது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் அல்ல. ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் சேர்த்தே நாம் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். அவ்வாறானால் முழு நாட்டு மக்களினதும் நன்மைக்காக பேசும் நாம் இனவாதிகளா?

அதிகாரப் பகிர்வு கொடுக்கப்படுவதன் ஊடாக அரச இயந்திரம் மேலும் வலுப்பெறுகின்றது. இதனூடாக மக்களின் தேவைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறையவே காணப்படுகின்றன.

அத்துடன் அதிகாரப் பகிர்வு என்பது ஏற்கனவே இந்த நாட்டின் அரசியல் யாப்பில் அடங்குகின்ற விடயம் என்பதால் அதனை அமுல்ப்படுத்தவே கோருகின்றோம்.

இதேவேளை இன்று எமக்கு அதிகாரங்கள் இன்மையினால் எமது அனுமதியின்றி பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலைகாணப்படுகின்றது. இது நாட்டின் அரசியல் நடைமுறைக்கு ஆரோக்கியமான விடயமொன்றல்ல.

அத்துடன் சிறுபான்மை சமூகங்கள் வாழும் இடங்களில் மதுபான தொழிற்சாலைகளை நிறுவுவது எமது எதிர்கால சந்தியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்பதுடன் அவ்வாறான விடயங்களை எங்களால் அனுமதிக்க இயலாது.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் மதுபான பாவனை 3 மடங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே நாம் கடந்த பெப்ரவரி மாதம் ஏறாவூருக்கு ஜனாதிபதியை அழைத்து வந்து போதைக்கு எதிரான மாபெரும் கூட்டமொன்றை நடத்தினோம்.

ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது பகுதிகள் மேலும் சில புறக்காரணிகளால் பாதிக்கப்படுவதற்கு எமக்கு இடமளிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எமது மாகாணத்தில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று தொழில்வாய்ப்பின்றி இருக்கின்றார்கள் என்பதுடன் அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் விதமான ஆரோக்கியமான முதலீடுகள் எமது மாகாணங்களுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

அதனால் தான் மாகாணங்களுக்கென தனி முதலீட்டு சபையினை நாங்கள் கோரிவருகின்றோம். இதனூடாக எமக்கு தேவையான முதலீடுகளை எமது மாகாணத்துக்கு கொண்டுவரக்கூடிய நிலைமை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆகவே எமது அதிகாரங்களை முடக்கி விட்டு எவரோ செய்யும் காரியங்களுக்கு எம்மீது குற்றம் சுமத்தும் கையாலாகத செயற்பாடுகளை இன்று மத்தியில் உள்ள சில உறுப்பினர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

அது மாத்திரமன்றி வடக்கு, கிழக்கில் வாழும் சிறுபான்மை மக்களின் நலன்கள் மீது தொடர்ந்தும் கட்டுப்பாடுகளும் அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. அவை நீக்கப்படும் வரை எமது குரலை ஒடுக்க முடியாது என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எம் தேசத்து மக்களின் நலனுக்கு குரல் கொடுப்பவர்கள் இனவாதிகளென்றால் நாங்கள் இனவாதிகளாகவே இருந்து விட்டு போகின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com