சிறி அண்ணர் பேசும் தமிழ்த் தேசியம் என்ன விலை?

இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழு பிரசல்ஸ் சென்றுள்ளது. இக்குழுவில் தமிழர் பிரதிநிதிகள் சார்பாக தீவிர தமிழ்த் தேசியப் பற்றாளராகவும் நல்லாட்சியின் போலி முகத்திரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு கிழித்தெறியும் தற்துணிவும் வல்லமையும் பெற்ற ஒரே தலைவன் என்றும் தன்னை காண்பியல் செய்துகொண்டுதிரியும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இவ்விஜயம் தொடர்பில் அவரது பிரச்சார ஊடகங்கள் மௌனம் காத்துள்ள போதும் அங்கு சென்ற குழுவினர் எடுத்து ருவிற்றரில் பகிர்ந்துகொண்ட புகைப்படம் ஒன்றே இவரின் கபடத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அப்படத்தில்கூட முகம் தெரிந்துவிடக்கூடாது எனும் உறுதியோடு பின்னால் ஒழிந்து நிற்க முற்பட்டமை அப்பட்டமாகத் தெரிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு தாமதம் காட்டி வருகின்றது; மேலும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் வர்த்தக வலயங்களில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன போன்ற விடயங்களை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மறுக்குமாறு கோரியுள்ளனர்.

இலங்கை அரசு சார்பில் பெல்ஜியத்திற்கு சென்றுள்ள குழுவின் தலைவரான ஹார்சா டி சில்வா ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுக்கு பரந்த ஆதரவு இருந்ததாகவும், சில அமைப்புகள் மாறுபட்ட அபிப்பிராயத்தைக் கொண்டிருந்த போதும், அவர்களோடு தானும் தனது குழுவினரும் தொடர்புகொண்டு; உரையாடி; அவர்களுக்கு அரசின் நல்லாட்சி, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள், மீளுறவை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் அரசு மேற்கொண்ட முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுத்துக்கூறி; அவர்களை வென்றெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசுக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களைச் செய்து வருகின்ற ஒருவர், எவ்வாறு அரசுக்கு சாதகமான பரப்புரையில் ஈடுபட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் கேட்ட போது; இலங்கையை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வதன் மூலமே தமிழ் பிரதேசங்களையும் அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என அவர்கள் பதிலளித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த ஜஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தாலேயே கிளிநொச்சியில் ஆடைச்தொழிற்சாலைகளை நிறுவி அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக எஸ் சிறிதரனுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை.

இதே சமயம் வழமையாக சிறிதரனை அழைக்கும் புலம்பெயர் சமூக ஆதரவு அமைப்புகள் பிரஸல்ஸில் இலங்கை அரசுக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் போன்ற அமைப்புகள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என்ற போராட்டத்தை முன்னெடுக்கின்றன. பிரித்தானிய தமிழர் பேரவை இது தொடர்பான கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com