சித்திரவதைகள் தொடர்பில் விசாரிக்கப்படும்!

இலங்கையில் தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்தப்படும் என்று இலங்கை வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதைய ஆட்சியில் சித்திரவதை செய்யப்பட்ட 52 தமிழர்களின் சாட்சியங்களுடன், அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம், “எந்த வொரு சித்திரவதைகளையும் இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

இந்த முயற்சிக்கு நாட்டுக்கு வெளியில் உள்ளவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளின் ஒத்துழைப்பும் உதவிகளும் அவசியம். விசாரணைகளுக்கு ஆதாரங்கள் முக்கியம்.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நல்லிணக்கம், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் ஊக்குவிப்பு போன்றவற்றுக்கும், சித்தரவதைகளை தடுப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் எந்த விதத்திலும் சித்திரவதைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது சகித்துக் கொள்ளவோ மாட்டாது.

சித்திரவதைகளை முற்றாக அகற்றுவதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும், இருதரப்பு பங்காளர்கள், அனைத்துலக அமைப்புகள், தமது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கைக்கு வழங்கி உதவ வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com