சற்று முன்
Home / முக்கிய செய்திகள் / சிங்கள, பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெறுகிறது

சிங்கள, பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெறுகிறது

நிறைவேற்று ஜனாதிபதி தெரிவுக்காக கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலின் ஊடாக சிங்கள, பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுக் காணப்படுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் ஜுலை, 23ஆம் திகதி முக்கியமானது எனவும் அப்போதிருந்த சூழல் இப்போது நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுப்பு ஜூலை இனக்கலவரம் இடம்பெற்று 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதன் நினைவு வாரம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விக்னேஸ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களின் செங்குருதிக் கறை படிந்த நாட்களில் 1983, ஜுலை, 23ஆம் நாள் முக்கியமானது.

புத்தரின் போதனைகளைக் கடைப்பிடிப்பவர்கள் என்று கூறிக்கொள்வோர் அன்று தென்னிலங்கையில் ஒரு கையில் வாக்காளர் பட்டியலையும் மறுகையில் கத்திகள், கோடரிகள், வாள்கள் என்பவற்றுடனும் வீடுவீடாகச் சென்று தமிழர்களை வெட்டியும் எரித்தும் கொன்றொழித்த நாள்.

தமிழர்களின் உடைமைகளைத் தீயிட்டும் சூறையாடியும் சிங்கள, பௌத்த பேரினவாதம் தாண்டவமாட வழிவிடப்பட்ட நாள். விடுதலை வீரன் குட்டிமணி தனக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் தனது கண்களைத் தானம் அளிக்கும்படியும் அப்போது மலரப்போகும் தமிழீழத்தைத் தனது கண்கள் காணும் என்று கூறியதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிங்களக் காடையர்களால் அவரின் கண்கள் பிடுங்கப்பட்ட நாள்.

குட்டிமணியுடன் தங்கதுரை உட்பட சிறையிலிருந்த 53 அரசியற் கைதிகள் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்ட நாள். தமிழ் மக்களுக்கெதிராக நிறுவனப்படுத்தப்பட்ட தொடர் இனக் கலவரங்களான 1956, 1958, 1977, 1981 வன்முறைகளின் உச்சகட்டமாக இன அழிப்பு நடைபெற்ற ஏழு நாட்களின் தொடக்கநாள்.

1983ஆம் ஆண்டு ஜுலைக் கலவரத்தில் வன்முறைகளில் சுமார் 3000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். தெற்கில் எஞ்சியிருந்த தமிழர்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்துக்கு விரட்டப்பட்டார்கள்.

நான் அப்போது மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும் நீதவானாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது மானிப்பாய் போன்ற இடங்கள் ஊடாக இராணுவ வாகனங்களில் வந்தோர் வீதியில் கண்ட மக்களை வகை தொகையில்லாமல் சுட்டுச் சென்றது சம்பந்தமாக மரண விசாரணைகள் நடத்த எவரும் முன்வராத நிலையில் நான் நடத்தியமை இப்போதும் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றன.

அவ்வாறு நடத்தியதால் ஜனாதிபதி ஜே.ஆரின் சகோதரரான ஜனாதிபதி சட்டத்தரணி எச்.டபிள்யூ.ஜயவர்தனவின் கோபத்திற்கு ஆளானேன். இந்த உச்சக்கட்ட மிலேச்சத்தனமான அடக்குமுறைதான் எமது இளைஞர்களை முழு அளவிலான ஆயுதப் போராட்டத்துக்கு நிர்ப்பந்தித்து வடக்கு கிழக்கில் ஒரு நிழல் அரசை உருவாக்குவதற்கு வழிகோலியது.

பல்லாயிரக்கணக்கான எமது மக்களை இனப் படுகொலைக்கு உட்படுத்தி இந்த நிழல் அரசும் 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இவை எல்லாமே சிங்கள பௌத்த பேரினவாத மேலாண்மையை நாடு முழுவதும் நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் காலம் காலமாக நன்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனப்படுகொலை நிகழ்வுகளாகும்.

இதனைவிட, மாகாண சபையின் ஊடாக எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு இனவழிப்பு ஆவணமாக உருவாக்கி சர்வதேச விசாரணைக்கான எமது போராட்டத்தைப் பலப்படுத்தியுள்ளேன். இன்று நிலவும் சூழ்நிலையும் 1983இல் இருந்த சூழ்நிலையும் ஒரே விதமாகவே காணப்படுகின்றன.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையூடாக சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெற்று காணப்பட்டமையே அன்றைய இனக் கலவரத்துக்கு வழிகோலியது. அதேபோல, இன்றும் அதே நிறைவேற்று ஜனாதிபதி தெரிவுக்காக கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலின் ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுக் காணப்படுகின்றது.

சிங்கள பௌத்த துறவிகள் எதற்கெடுத்தாலும் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று அச்சுறுத்துவது மீண்டும் எம்மீதோ அல்லது எமது முஸ்லிம் சகோதரர்களின் மீதோ எவ்வேளையும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என்பதையே கட்டியம் கூறி நிற்கின்றது.

எனதருமை மக்களே! இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதாலோ அல்லது இலங்கைக்குள் பேசுவதாலோ எமக்கான உரிமையை நாம் என்றுமே பெற்றுவிட முடியாது என்பதையே வரலாறு எமக்கு இடித்துரைக்கின்றது. எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமான பரிகார நீதிக்கூடாகவே எமது உரிமைகளை நாம் அடைய முடியும்.

இதற்கு நேர்மை, விலைபோகாத் தலைமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் நிறுவன ரீதியான செயற்பாடுகளே அவசியமாக இருக்கின்றன. இதற்கான ஒரு அடித்தளத்தை இடுவது எமது எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் முக்கியமானதாக இருக்கும்.

இதற்கான முழுமையான ஒத்துழைப்பை நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் நாம் வேண்டுகின்றோம். இன்றைய இந்த நாளில் 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் படுகொலைசெய்யப்பட்ட அனைத்து மக்களுக்கும் எமது அஞ்சலிகளை செலுத்துவதுடன் எமது எதிர்கால சந்ததியினர் வளமான, பாதுகாப்பான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளும் உரிமைகளுடன் வாழ வழிசெய்யும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்ற இன்று உறுதிபூணுவோமாக” என்று விக்னேஸ்வரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

லொஹான் ரத்வத்த தொடர்பான சம்பவங்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி

அண்மையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற மேல் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com