சிங்களம் தெரியாவிடின் புறக்கணிக்கப்படுவீர்கள் – எச்சரிக்கிறார் முதலமைச்சர்

Wicki1_CIதமிழ்ப் பேசும் சிங்கள அலுவலர்கள் வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படப் போகின்றார்கள். நாங்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்களிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைமகள் திருவுருவ சிலை புதன் கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

அனைத்து மாணவர்களுக்கும் நான் கூறக்கூடிய முக்கிய அறிவுரை என்னவெனில் ஆங்கில மொழிக் கற்கையில் சிறிய வகுப்பில் இருந்தே கூடிய கவனஞ் செலுத்துங்கள் என்பதே. ஆங்கிலம் கற்பதால் உங்கள் தமிழ் புறக்கணிக்கப்பட்டு விடாது. மாறாக எங்கள் தமிழ் மொழி உலக ரீதியாகக் கருத்துக்களைத் தன்னுள் பெற்றெடுக்க அது உதவி புரிகின்றது. தென்னிந்தியாவில் சட்டம் தமிழில் படிப்பிக்காத காலத்தில் 1971ம் ஆண்டில் நான் சட்டத்தை முதன் முதலில் தமிழில் சட்டக் கல்லூரியில் பயிற்றுவித்தேன். தமிழ் மொழிமூலம் சட்டம் பயிற்றுவிக்க எனது ஆங்கில அறிவே உறுதுணையாக இருந்தது. ஆகவே ஆங்கிலத்தைத் தயவு செய்து புறக்கணிக்காதீர்கள்.

மிகப் பின்தங்கிய கிராமங்களில் இருந்து கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மிகத் திறமையாகக் கற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான சில மாணவர்கள் அவர்களின் ஆங்கிலப் புலமைக் குறைவினால் தமது பல்கலைக்கழக கற்கை நெறிகளைத் தொடர்ந்து கற்க முடியாது பல்கலைக்கழகத்தை விட்டு விலகி சிறு சிறு தொழில் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டிருப்பதாக நாம் அறியவந்துள்ளோம். இது வேதனைக்குரியது. எனவே மொழி அறிவு ஒவ்வொரு மாணவ மாணவியரினதும் மூல வேர் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு இம் மாணவர்கள் சிறு வயதில் இருந்தே ஆங்கிலப் பாடத்தை விரும்பிக் கற்க வேண்டும். அவ்வாறு இம் மாணவர்கள் விரும்பிக் கற்கக் கூடிய விதத்தில் ஆங்கிலப் பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்களும் இலகு நடையில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அதன் மூலம் வடபகுதி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும். கடைசியாக ஒரு வேண்டுகோள். எமது இலங்கை வாழ் மக்களிடையே ஐயமும், சந்தேகமும், மனக்கிலேசமும், அவநம்பிக்கையும், ஆத்திரமும் இதுகாறும் ஏற்பட முக்கிய காரணம் தவறான புரிதலாகும்.

இருமொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால் ஒருவர் மொழியை ஒருவர் கற்க வேண்டும். நோர்வே போய் அவர்கள் மொழியை எம்மவர் கற்கின்றார்கள், பிரான்ஸ் போய் பிரேஞ்சு மொழியைக் கற்கின்றார்கள். ஆனால் நாம் சிங்கள மொழியைப் புறக்கணிக்கின்றோம். நான் சிங்களம் படிக்கத் தொடங்கியது 1955ம் ஆண்டில். 1956ம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்ததும் ஆத்திரத்தில் சிங்கள மொழியைப் படிப்பதை நிறுத்திக் கொண்டேன்.

இன்று குறையுடன் தான் சிங்கள ஊடகங்களுக்கு சிங்களத்தில் எமது பக்க அரசியல் குறைபாடுகளை நான் கூறி வருகின்றேன். நான் அன்று தொடங்கிய சிங்களப் படிப்பைத் தொடர்ந்து வந்திருந்தேனானால் எந்தச் சிங்கள அரசியல்வாதிக்கும் அவரின் மொழியிலேயே சுடச் சுடப் பதில் அளித்திருக்கலாம். இன்று சிங்கள மாணவர்கள் கட்டாயமாகத் தமிழ் படிக்கத் தொடங்கியுள்ளார்கள். விரைவில் தமிழ்ப் பேசும் சிங்கள அலுவலர்கள் வடகிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்படப் போகின்றார்கள். நாங்கள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். சிங்கள அறிவு இல்லாதவர்கள் வருங்காலத்தில் புறக்கணிக்கப்படக்கூடும். ஆகவே அரசியலை மறந்து சிங்கள மொழியாற்றலையும் விருத்தி செய்யுங்கள் என மாணவர்கள் மத்தியில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com