சாத்தான்கள் வேதம் ஓதுகின்றனரா? – ஈபிடிபியின் அறிக்கைக்கு சட்டத்தரணி சுகாஸ் பதிலடி

திருமதி அனந்தி சசிதரன் வீட்டின்மீது கடந்த மாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதல் பற்றி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் (ஈபிடிபி)  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையை பார்த்தபோது சாத்தான்கள் வேதம் ஓதுவதுபோல் இருந்தது…என்னைப்பற்றியும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதனால் இவ் ஊடக அறிக்கையை வெளியிடுகின்றேன்…

கடந்த 2013 மாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் “சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின்” சட்ட ஆலோசகராக கடமையாற்றியிருந்தேன்.2013 செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி நள்ளிரவு திருமதி அனந்தி சசிதரனின் வீட்டைச்சூழ இராணுவப்புலனாய்வாளர்களும் ஆயுதம் தரித்த நபர்களும் நிற்பதாகவும் அவரைப்பாதுகாப்பதற்காக என்னை உடனடியாக அங்கு வருமாறும் முறைப்பாடு கிடைத்தது.நள்ளிரவு 12 மணியளவில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தும் எனது கடமையைச் செய்வதற்காக திருமதி அனந்தி சசிதரனின் வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு எங்களை சூழ்ந்துகொண்ட இராணுவ சீருடை தரித்த ஆயுததாரிகளும் ஈபிடிபி ஒட்டுக்குழுவை சேர்ந்த சிலரும் என்னையும் அங்கிருந்த அனந்தியின் ஆதரவாளர்களையும் தாக்கி வெறியாட்டம் போட்டதுடன் நாங்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை ஊரறிந்த உண்மை.இதை இப்போது ஈபிடிபி மறுக்க முற்படுவது முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பதை போன்றது.

நான் எந்த மேடையிலும் உண்மையையே பேசுகின்றேன்.அது ஐக்கிய நாடுகள் சபை மேடையாக இருக்கலாம் அல்லது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மேடையாக இருக்கலாம்.காரணமின்றி ஈபிடிபி மீது குற்றஞ்சுமத்தவில்லை என்பதை பொறுப்போடு கூறுகின்றேன்.அவர்கள் செய்ததையே கூறுகின்றேன்.நான் அவர்களைப்பற்றி உண்மைக்கு மாறானவற்றை கூறுவதாக அவர்கள் கருதினால் தாராளமாக என்மீது மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யலாம்.அவ்வாறு அவர்கள் வழக்குத்தாக்கல் செய்தால் அதை முறைப்படி எதிர்கொண்டு அவர்களுக்கு மானம் இல்லாத காரணத்தினால் மானநஷ்டம் ஏற்படவில்லை  என்பதை நிரூபிக்க தயாராகவே உள்ளேன்.

நீங்கள் உத்தமர்கள்போல் அறிக்கை விட்டால் மட்டும் நீங்கள் செய்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கல்கள், வன்புணர்வுகள், காட்டிக்கொடுப்புக்களை தமிழ்மக்கள் மறந்துவிடுவர் என்று நினைத்தால் அது உங்கள் அறிவீனமே!!!  முட்டாள்தனமே!!!

உங்களைப்போல்  பதவிகளுக்காகவும்  அதிகாரத்திற்காகவும் அங்கலாய்த்து பொய்யுரைப்பவன் நானல்ல.நான் கண்ட உண்மையை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தேன் – இனியும் வெளிப்படுத்துவேன்…

டக்ளஸ் தேவானந்தா அவர்களே!!! முடிந்தால் இதுபற்றி ஒரு பகிரங்க விவாதம் வைப்போம்…வந்து மோதிப்பாருங்கள்…மக்களுக்கு யாரின் கைகள் கறைபடிந்ததவை என்பது அப்போது புலப்படும்…

எத்தடை வந்தாலும் தமிழ்த்தேசியத்திற்கான என் பணி தொடரும்…ஆயுதங்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அஞ்சுபவன் நானல்ல…அப்படி அஞ்சியிருந்தால் அன்று துப்பாக்கி முனையில் உங்கள் ஒட்டுக்குழுவினரும் இராணுவப்புலனாய்வாளர்களும் என்னை தாக்கி அச்சுறுத்தியதோடு வீட்டுக்குள் முடங்கியிருப்பேன்…உங்கள் ஆயுதத்திற்கே  அஞ்சாத நான் ஒருபோதும் உங்கள் அப்பட்டமான பொய்யான ஊடக அறிக்கைக்கு அஞ்சேன்…

உண்மைக்காகவும் நீதிக்காவும் தமிழ்த்தேசியத்திற்காகவும் என் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com