சற்று முன்
Home / செய்திகள் / சஹ்ரான் பயன்படுத்திய துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்பு..

சஹ்ரான் பயன்படுத்திய துப்பாக்கி, வெடிபொருட்கள் மீட்பு..

சஹ்ரான் குழுவினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டன.

சஹ்ரான் குழுவின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்த கல்முனை சியாம் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு இன்று (18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே ஆயுதங்கள் மீட்கப்பட்டன. காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தேசிய அரச புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இவ் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் அம்பாறை மாவட்ட பிரதம செயற்பாட்டாளரான சியாம் என்பவரின் உறவினரின் காணி அமைந்துள்ள பாலமுனை-06, உதுமாபுரம் என்னும் பகுதியில் இருந்தே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இக்காணியில் உள்ள வாழைத்தோட்டம் அமைந்துள்ள பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ள சியாமினால் மறைத்து வைக்கப்பட்டு பொலிஸாரினால் மீட்கப்பட்ட பெருந்தொகையான இறுவட்டுகள் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அண்மையில் உள்ள பகுதியிலேயே இப்பொருட்கள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தன.

பொலிஸாரின் இத்தேடுதல் நடவடிக்கையின் போது ரி-56 துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தப்படும் மகசீன் ஒன்றும், அதில் 30 துப்பாக்கி ரவைகளும், கைப்பற்றப்பட்டன. அத்தோடு, டெட்டனேற்றர்கள்-07, வோட்டர் ஜல், வயர்கோர்-02, பற்றரி-04, ரைமர்-02, யூரியா மற்றும் அமோனியம் அடங்கிய தூள் பொதிகள், சலோரேப்-02, மெழுகுதிரி-02 உள்ளிட்ட இரும்புக் குழாய்கள், வெடிபொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள் என்பன இதன்போது பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

தேசிய உளவுத் துறையின் தகவலினை மையப்படுத்தி அம்பாறை வலய சிறப்பு பொலிஸ் குழுவினர், அம்பாறை தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று பொலிஸார் போன்றோர் இத்தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கனரக வாகனத்தின் துணை கொண்டு இக்காணி தோண்டப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ள மேலதிக பொருட்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதி சஹ்ரானின் சகாவான சியாமின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த மே மாதம் 28, 29ஆம் திகதிகளில் 15 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டதுடன், மே மாதம் 31 ஆம் திகதி பாமுனைப் பிரதேசத்தில் இருந்து மேலும் 35 இலட்சம் ரூபா பணம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப் பகுதியில் இருந்து பயங்கரவாதி சஹ்ரானின் மடி கணிணியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com