சர்வதேச விமான நிலையத்தை பூநகரியில் அமைக்கலாம். – சுரேஷ் யோசனை.

சர்வதேச விமான நிலையத்தை பலாலியில் அமைக்காமல், கிளநொச்சி பூநகரிப் பிரதேசத்திற்கு அமைப்பது சிறப்பானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள  அவரது வீட்டில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 
பலாலியை சர்வதேச விமானத் தளமாக மாற்றுவது தொடர்பில் தற்போது பலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதற்கமைய விமான நிலையத்துக்கான காணிகளை கையகப்படுத்தவது, காங்கேசன் துறை துறைமுகத்துக்கான காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலகத்திலும் கூட்டமொன்று நடைபெற இருக்கின்றது. 
இதில் ஒரு விடயத்தை நாம் யோசிக்க வேண்டும். 
அதாவது தென்மாகாணத்தில் ஹம்பாந்தோட்டையில் மாத்தள என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையமொன்று இருக்கின்றது. அங்கு விமான நிலையம் வருவதற்கு முன்பாக வீரகட்டிய என்ற இடத்தில் தான் அந்த விமான நிலையம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
ஆனால் அங்குள்ள விவசாயிகள் எதிர்த்ததன் காரணமாக அது பிறகு இப்ப இருக்கின்ற மாத்தள என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. அதே நேரம் இங்கும் பலாலி மக்கள் விவசாயம் செய்கின்ற நிலமாகவே அந்த நிலம் இருக்கின்றது. 
இங்குள்ள நிலம் என்பது மக்களுக்கு அதிகளவிலான வருமானத்தை ஈட்டிக் கொடுக்கக் கூடியது. இதே போன்று மயிலிட்டி துறைமுகம் என்பது மீன்படிக்கான சிறந்த இடம். 
ஆகவே இந்த இடங்களை பிடித்து வைத்து அதில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. 
யாழ்ப்பாணத்திற்கு அடுத்தபடியாக கிளிநொச்சியில் பெரிய நிலப்பரப்பு இருக்கின்றது. 
அதிலும் பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடைப்பட்ட பிரதேசம் என்பது பல்வேறு பொருளாதார வளங்களை உருவாக்குவதற்கான இடம். இங்கு ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்குவது தொடர்பான ஆய்வொன்றைச் செய்ய முடியும். அங்கு தேவையான அளவு காணிகள் இருக்கின்றது. 
அந்த இடமென்பது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் செல்லக் கூடிய வீதிப் போக்குவரத்துக்கள் இருக்கின்றன. பலாலியை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோமாக இருந்தால் பல பாதிப்புக்கள் ஏற்படலாம். 
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குடிசன நெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனால் அடுத்த பத்து வருடத்திற்குள் வாகனங்களும் அதிகரிக்கும். இதனையடுத்து வாகனப் போக்குவரத்து என்பது அதிகரித்து மிக நெரிசலை ஏற்படுத்தும். பொருளாதார வளங்கள் நிறைந்த பலாலி மற்றும் மயிலிட்டி போன்ற இடங்கள் சுவீகரிக்கப்படுகின்ற காரணத்தால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படும். 
ஆகவே இந்த சர்வதேச விமான நிலையம் என்பது நிச்சயமாக வடபகுதி மக்களுக்குத் தேவை. ஆனால் அந்த சர்வதேச விமான நிலையத்தை பலாலியில் வைப்பதாகக் கருதாமல் அதனை கிளநொச்சி மாவட்டத்தில் இருக்கக் கூடிய பூநகரிப் பிரதேசத்திற்கு நகர்த்துவதென்பது நல்லதொரு செயற்பாடாக அமையும். 
இதனை விடுத்து இங்குள்ள மக்களின் காணிகளை சுவீகரித்து அந்த மக்களை நடுத்தெருவில் நிறுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் ஐனாதிபதி, பிரதமர் ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து யாழிலிருந்து கிளிநொச்சிக்கு நகர்த்துவது பற்றி யோசிக்க வேண்டும். 
அப்படி அவர்கள் சிந்திப்பதன் மூலமாகத் தான் இந்த மக்களின் மீள்குடியேற்றங்கள் என்பது உறுதிப்படுத்தப்படும்.
அவ்வாறு சர்வதேச விமான நிலையம் அங்கு செல்வதன் ஊடாக பூநகரியின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும். 
யாழ்ப்பாணத்தில் இருக்க கூடிய சன நெருக்கம் குறைந்து மக்கள் அங்கும் சென்று இருக்கும் நிலை ஏற்படலாம். புதிது புதிதான பொருளாதார வளங்கள் என்பன உருவாக்கப்படலாம். 
அதேவேளை பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையில் ஐந்து குளங்கள் இருக்கின்றன. இவற்றைப் புனரமைத்து நீரைச் சேகரித்தால் பூநகரிக்கு மட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கே தண்ணியை வழங்க முடியும் என்பது ஏற்கனவே பல்வேறு நிபுணத்துவர்களால் சொல்லப்பட்டதொரு விடயமாக இருக்கின்றது.என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com