சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு இணங்காவிட்டால் மகிந்தவிற்கு ஏற்பட்ட நிலை நல்லாட்சிக்கு ஏற்படும் – எச்சரிக்கிறார் சுமந்திரன்

சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருப்பதாக சாக்குப் போக்குச் சொல்வதை விடுத்து மகிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியினை நினைவில் வைத்தேனும் இன்றைய அரசாங்கம் சரியான முறையில் செயற்பட வேண்டும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாது விடுவதைப் போன்று சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட முடியாது இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட கசப்பான பாடம் இதனாலேயே அவர் தோற்கடிக்கப்பட்டார் என்றும் எச்சரித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கூட்டுறவு சங்கங்களின் கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சர்வதேச குற்றங்களாக அறிவிக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டில் குற்றங்களாக அறிவிக்கப்படவில்லை. அவைகள் குற்றங்களாக்கப்பட வேண்டும். அதன் பின்னர் சர்வதேச நீதிமன்றப் பொறிமுறை அவசியமானது. எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாது விடுவதைப் போன்று சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட முடியாது. இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட கசப்பான பாடம். 2009 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட கூட்ட அறிக்கையினை விட்டு விட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் அதே வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றாத காரணத்தினால் தான் சர்வதேச விசாரணையும் வந்தது. ஆட்சி விலக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

ஆகையினால், மகிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியினை நினைவில் வைத்தேனும் இன்றைய அரசாங்கம் சரியான முறையில் செயற்பட வேண்டும். தமது நன்மைக்காக சரி அரசாங்கம் உரிய முறையில் செயற்பட வேண்டும். அத்துடன் அரசாங்கத்தின் நன்மைக்கு அப்பால் நாட்டின் நன்மைக்காக சரி சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

தமது வாக்காளர்களுக்கு இனிமையைக் கொடுக்க வேண்டுமென்பதற்காக சில கருத்துக்களை சொன்னாலும் கூட நடைமுறையில் சில விடயங்களை நிறைவேற்றாவிடின், பாரிய பின்விளைவுகள் ஏற்படும். சர்வதேச நீதிபதிகள் விசாரணை செய்வதற்கு இலங்கைச் சட்டத்தில் இடமில்லை என பலர் கருத்துக்களை சொல்கின்றார்கள்.

2015 ஆம் ஆண்டு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிடவில்லை. பிரதமர் கூட அதனை நியாயப்படும் விதமாக கருத்து வௌியிட்டார். தற்போது பிரதமர் உட்பட வெளிவிவகார அமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை செய்வதற்கு இடமில்லை என்ற கருத்தினைச் சொல்லி வருகின்றார்கள்.

இது தவறான கருத்து. அவ்வாறு அரசியலமைப்பில் எவ்வித தடைகளும் இல்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. அவ்வாறு தடை இருந்தாலும் கூட அந்த தடையை நீக்கி சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு. சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் போது, கைச்சாத்திட்டு விட்டு, நாட்டின் சட்டங்கள் எம்மைத் தடுக்கின்றன என சாட்டுப் போக்குச் சொல்ல முடியாது. இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com