சர்ச்சைகளிற்கு மத்தியில் ஜ.நா.விற்கான பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்

பெரும் கூச்சல் குழப்பங்களுடன் வாதப் பிரதிவாதங்களுடன் ஆரம்பித்த வடக்கு மாகாண சபையின்  அமர்வில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திற்குரிய அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் தீர்மானிக்கப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் பிரேரணை” நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு சிங்கள உறுப்பினர்கள் எதிர்த்துள்ளதோடு எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணைக்கு நடுநிலை வகித்துள்ளார். ஏனைய எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பிரேரணையை ஆதரித்துள்ளனர்.

கடந்த 09.03.2017 அன்று நடைபெற்ற சபை அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை இன்றைய (14) அமர்வில் அவைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது சிவாஜிலிங்கத்தால் சபை உறுப்பினர்களிற்கு திருத்தப்பட்ட பிரேரணை அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகள் கையளிக்கப்பட்டது. அதனையடுத்து பிரேரணையை முன்மொழிய சிவாஜிலிங்கம் முற்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்ததோடு ஏற்கனவே தமக்கு மின்னஞ்சல்மூலம் வழங்கப்பட்ட பிரேரணைக்கும் சபையில் சிவாஜலிங்கத்தால் வழங்கப்பட்ட பிரேரணைக்கும் தலைப்பில் இருந்தே வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அதனை தாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் புதிதாக கையளிக்கப்பட்டதை ஏற்பதாயின் தாங்கள் அதனை படித்தறிந்து கெள்ளவும் கட்சித் தலைமைகளுடன் ஆலோசிக்கவும் தமக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறினர்.

அதன்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த உறுப்பினர் தவநாதனால் சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த பிரேரணை கிழித்து எறியப்பட்டது. அதனையடுத்து ஆளும்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுடைய வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்ட நிலையில் அவைத்ததலைவர் சி.வி.கே சிவஞானம் நீங்கள் அடிபடும் அளவிற்கு இது பாரதூரமான விடையம் அல்ல. சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த பிரேரணையில் தலைப்பிலும் மற்றும் மூன்று விடையங்களில் மாத்திரமே திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. சபையில் அவர் முலப்பிரதியைச் சமர்ப்பித்து உரையாற்றவும் அதனை ஒருவர் வழிமொழிந்தபின் திருத்தங்களை வாசிக்கலாம் திருத்தங்களை ஏற்றுக்கொள்வதும் எதிர்ப்பதும் உறுப்பினர்களின் முடிவு. ஏற்க மறுத்தால் திருத்தப்படாத மூலப்பிரதிமீது விவாதம் நடைபெறும் எனக் கூறி சபையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.
அதனையடுத்து சிவாஜிலிங்கம் பிரேரணையை வாசிக்க உறுப்பினர் சுகிர்தன் அதனை வழிமொழிந்தார். அதனையடுத்து திருத்தங்களை ஒவ்வொன்றாக வாசிக்குமாறு சிவாஜிலிங்கத்திற்கு அவைத்தலைவர் அழைப்புவிடுத்தார். தலைப்பினை வாசித்தபோது மீண்டும் சபையில் குழப்பம் ஏற்பட்டது.

பிரேரணையின் மூலப் பிரதியின் தலைப்பு
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திற்குரிய அமர்வில் இலங்கை அரசாங்கத்துக்கான தீர்மாகத்தை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருதலும், மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்துதலும்”
எனவும்
திருத்தப்பட்ட பிரேரணையின் தலைப்பு
“இலங்கையை சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு உட்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவ நாடுகளைக் கோருதல்.” எனவும் காணப்பட்டது.

முன்னைய தலைப்பிற்கும் இரண்டாவது தலைப்பிற்கும் இடையில் பாரிய முரண் உள்ளதால் இரண்டாவது தலைப்பினை ஏற்கமுடியாது என உறுப்பினர்கள் வாதம் செய்தனர். இந்நிலையில் அனைவரினதும் ஏகோபித்த முடிவோடு
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்திற்குரிய அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் தீர்மானிக்கப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் தீர்மானம் சம்பந்தமானது”
என தலைப்பு மாற்றம் செய்யப்பட்டது.

அதனையடுத்து பிரேணையின் தீர்மானங்கள் மீதான திருத்தங்களை சிவாஜிலிங்கம் ஒவ்வொன்றாக வாசித்தார். முதலாவது தீர்மானம் சில சொற் திருத்தங்களுடன் பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டது.
2015 ஆண்டு புரட்டாதி மாதம் ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இணையனுசரணையுடன் வழங்கப்பட்ட, விசேடமாக பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, அடக்குமுறை மற்றும் சட்டத்துக்குப் புறம்பான நில ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் இடம்பெற்றாமை, இழப்பீட்டு அலுவலகம் தொடர்பான தீர்மானம் 30/1 ஐ இலங்கை அரசாங்கமானது போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இரண்டாவது தீர்மனமும் வாதப்பிரதிவாதங்களிற்கு மத்தியில்
“இலங்கை அரசாங்கமானது ஏற்றுக்கொண்டு, ஆங்கீகரித்துள்ளதும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உறுதியளித்துள்ளதுமான அதனுடைய பொறுப்புக்கூறல் செயன்முறையில் பன்னாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.”
என சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

மூன்றாவது தீர்மானத்திற்காக பல மணிநேரம் சபை போர்க்களமானது. தீர்மானத்தின் ஒரு சொல்லிற்காக அதற்கு பல்வேறு கற்பிதங்கள் கூறி பொரும் சமர் நடத்தினர் உறுப்பினர்கள்.
இலங்கையால் அதனுடைய சொந்தக் கடப்பாட்டை அமுல்படுத்த விரும்பாத…………………..(பட்சத்தில் / காரணத்தால் /நிலையில்) என மூன்று சொற்களில் எதனை சேர்ப்பது பொருத்தமானதாக இருக்கும் என மணிக்கணக்காக விவாதம் நடாத்தினர். ஒருவழியாக
“இலங்கையால் அதனுடைய சொந்தக் கடப்பாட்டை அமுல்படுத்த விரும்பாத காரணத்தால் இவ்விடையத்தை சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு உட்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேச சமூகத்திடமும் இச்சபையானது கோருகின்றது.” என திருத்தங்கள் செய்யப்பட்டது.

திருத்திய தீர்மானத்தையும் உறுப்பினர் சுகிர்தன் வழிமொழிய பிரேரணை மீதான சபை உறுப்பினர்களின் வாதாங்களின் பின் இரு சிங்கள உறுப்பினர்கள் எதிர்ப்பையும் எதிர்க்கட்சித்தலைவரின் நடுநிலை முடிவையும் பதிவுசெய்துகொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மூலப் பிரதியிலிருந்த ஏழாவது தீர்மானமான “இச் சபையானது அரசியல் தீர்வின் பொருட்டு இலங்கை அரசியலமைப்புச் சபைக்கு ஒரு தொகுதி முன்மொழிவுகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது” எனும் தீர்மானம் நீக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com