சரித்திரங்களை மாற்றி வரலாறுகளைப் புனையலாம் எங்கள் அடையாளச் சின்னங்களை அழிக்க முடியாது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

CMவடபகுதியில் தமிழர்களுக்குரிய அடையாளங்கள், தெற்கில் உள்ள கடும் போக்காளர்களாலும் மற்றையோராலும் மறுக்கப்பட்டு வரும் இத்தருணத்தில் அனுராதபுரம் இராச்சியம் அமைந்துள்ள பகுதியில் 12ம் நூற்றாண்டு காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவன் ஆலயம் உருக்குலைவின்றி மண்ணுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் இந்துக்களின் இருப்பிடம் எங்கு வரையெல்லாம் வியாபித்திருந்தது என்பதற்கு சான்றுகளாக விளங்குகின்றது.
சரித்திரங்கள் மாற்றப்படலாம் வரலாறுகள் புனையப்படலாம். ஆனால் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படமுடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் எம்மைச் சுற்றி சுமார் 1இலட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் கடமை புரிய அதற்கு மேலதிகமாக கடற்படை, பொலீஸ், ஆகாயப்படை என மேலதிகப் படைகள் எம்மைச் சுற்றி வலம் வருகின்றார்கள். கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில் கடல் வழியாக கஞ்சாப் பொதிகள் இலங்கைக்கு அதாவது வடபகுதிக்கு எடுத்து வரப்படுகின்றது எனின் இதன் பின்புலம் மற்றும் தார்ப்பரியங்களை ஓரளவு யூகித்துக் கொள்ளலாம். இத்தனை காவல்களையுந் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றதெனில் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் எங்கோ ஓட்டைகள் காணப்படுகின்றன என்பது புலனாகின்றது. வேலியே பயிரை மேய்ந்து வருகின்றதோ எனச் சந்தேகம் கூட எழுகின்றது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டதும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டதுமான குடும்பங்களுக்கான சுயதொழில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு
புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் 10.11.2016 வியாழக்கிழமை நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையின் முழு வடிவம் வருமாறு,
குருர் ப்ரம்மா………………………………………………
இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிப்பதற்காக இங்கே வந்திருக்கும் மாகாணசபை உறுப்பினர்களே, திணைக்கள அதிகாரிகளே, சமூக சேவைகள் பணிப்பாளர் அவர்களே, கூட்டுறவு உதவி ஆணையாளர் அவர்களே, கால்நடை வளர்ப்பு உதவிப் பணிப்பாளர் அவர்களே, எனது அமைச்சின் செயலாளர் அவர்களே மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக வருகைதந்திருக்கும் பயனாளிகளே, சகோதர சகோதரிகளே, எனதினிய குழந்தைகளே!
கடந்த கால கொடிய யுத்தத்தின் காரணமாக இருப்பை இழந்து பொருள் பண்டங்களை இழந்து, வீடு காணி நீர் நிலைகள் என அனைத்தையும் எம் மக்களுள் பலர் இழந்துள்ளார்கள். தத்தமது கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியவர்களை பறிகொடுத்தவர்கள் பலர். உடல் அங்கவீனம் அடைந்தவர்கள் பலர். பலதரப்பட்ட கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறி வாழ்வதற்குரிய அடிப்படை உதவிகள் ஏதும் அற்ற நிலையில் மிகவும் அல்லல் உறுவதை நாம் நன்கு அறிந்துள்ளோம். இம் மக்களுக்கு வடமாகாணசபையின் நிதியில் இருந்து சிறிய உதவிகளையாவது வழங்க நாம் முன்வந்தாலும் எமது சிறிய தொகைப் பணம் அனைவருக்கும் வழங்குவதற்கு போதாது. எனினும் போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்காவது ஏதாவது வகையில் உதவிகளைப் புரிய வேண்டும் என்ற நோக்குடனேயே இன்று நாம் இங்கு வருகை தந்திருக்கின்றோம்.
சுமார் 4.85 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நிலக்கடலைப் பயிர்ச்செய்கை, சிறுவியாபார தொழில் முயற்சிகள், சிறிய கடை நடத்தல், உணவு தயாரித்தலும் விற்பனையும், தேங்காய் வியாபாரம், தையல் இயந்திரம் கொண்டு தைத்து முன்னேறல் போன்ற பலதரப்பட்ட தொழில் முயற்சிகளுக்காக இவ் உதவு தொகைகள் வழங்கப்படவுள்ளன. இன்று இங்கே வழங்கப்படுகின்ற உதவிகள் இவர்களின் வாழ்க்கை முறைமையை மேலோங்கச் செய்வதற்கு போதுமானதாக இல்லாத போதும் அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி செய்ய உதவுவன என்ற நம்பிக்கையிலேயே இவ் உதவு தொகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த உதவிகள் மூலம் சுமார் 81 குடும்பங்கள் வரையில் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவிருப்பது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. கோழி வளர்ப்பிற்கு 28 பேர், ஆடு வளர்ப்பிற்கு 11 பேர், நிலக்கடலைப் பயிர்ச்செய்கை செய்யவிருப்பவர் 24 பேர், அத்துடன் வியாபார முயற்சியாகச் சிறிய கடை அமைப்பதற்கு 7 பேர், உணவு தயாரித்தல் விற்பனை செய்தலில் ஈடுபட இருப்போர் 02 பேர், தேங்காய் வியாபாரம் செய்ய இருப்போர் 2 பேர், தையல் இயந்திரம் தேவையானோர் 7 பேர் என மொத்தம் 81 குடும்பங்கள் இவ் உதவிகளை இன்று பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் அவற்றின் உதவி கொண்டு முன்னேற வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு எமது திணைக்களங்கள் உறுதுணையாக அமைவன. எமது அலுவலர்கள் உங்களுக்கு உரிய உதவிகள், அறிவுரைகள் வழங்காதிருந்தால் நேராக எமக்குத் தெரிவியுங்கள் அல்லது புதன் கிழமைகளில் என்னை வந்து கைதடியில் காணுங்கள். உரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.
போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எம் மக்களை எவ்வாறு கரையேற்றுவதெனத் தெரியாது விழித்துக் கொண்டிருக்கும் இவ் வேளைகளில் ஒழுக்கக்குறைவான செயற்பாடுகள் அதாவது வாள் வீச்சு, போதைப் பொருள் பாவனை, அளவுக்கு மிஞ்சிய மதுபானப் பாவனைகள் ஆகியவை எம் மக்களிடையே பரவி வருவது எமக்கு மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுகின்றது. இந்தப் பிரதேசங்களில் அவை பரவியிருக்கின்றனவோ நான் அறியேன். ஆனால் போராட்ட காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வடபகுதி இன்று கேரள கஞ்சா வர்த்தகத்தின் வர்த்தக மையமாக உருவாகியிருப்பது எமக்கு கவலையைத் தருகின்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற பொலீஸாருடனான சந்திப்பின் போது இந்த விபரம் கூறப்பட்டது. அவற்றைத் தடுத்து நிறுத்த பொலிசார் ஊக்கம் காட்டி வருகின்றார்கள்.

வடபகுதியில் எம்மைச் சுற்றி சுமார் 1இலட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் கடமை புரிய அதற்கு மேலதிகமாக கடற்படை, பொலீஸ், ஆகாயப்படை என மேலதிகப் படைகள் எம்மைச் சுற்றி வலம் வருகின்றார்கள். கடலோரப் பாதுகாப்புக்கள் மிகவும் இறுக்கப்பட்டுள்ள நிலையில் கடல் வழியாக கஞ்சாப் பொதிகள் இலங்கைக்கு அதாவது வடபகுதிக்கு எடுத்து வரப்படுகின்றது எனின் இதன் பின்புலம் மற்றும் தார்ப்பரியங்களை ஓரளவு யூகித்துக் கொள்ளலாம். இத்தனை காவல்களையுந் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றதெனில் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் எங்கோ ஓட்டைகள் காணப்படுகின்றன என்பது புலனாகின்றது. வேலியே பயிரை மேய்ந்து வருகின்றதோ எனச் சந்தேகம் கூட எழுகின்றது.
அதை விட போரில் ஈடுபட்ட படையினர் வடமாகாணத்தில் பல ஏக்கர் காணிகளில் தொடர்ந்திருந்து வருவது மக்களின் சுமூகமான சுதந்திரமான வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. முக்கியமாகப் பெண்களையே அது பாதிக்கின்றது. எனவே படிப்படியாக வடமாகாணத்தில் இருந்து படையினர் வாபஸ் பெற வேண்டும் என்ற கருத்தை நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
எமது வனப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு வருவது உங்கள் எல்லோருக்கும் தெரியும். பூடான் நாட்டில் அதன் 72 சதவிகிதம் காணி காடாக, வனமாக, பச்சைப் பசேலென்று இருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை அந்த ஊர் அரசர் கொண்டு வந்துள்ளார். மரங்களை, காடுகளை அழிப்பதால் சீதோ~ண நிலை பாதிக்கப்படுகின்றது; வன ஜந்துக்கள் அழிந்து போகின்றன் செடி வகைகள், மர வகைகள் அழிக்கப்படுகின்றன் மக்களின் இயல்பு நிலைக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது என்று கண்டு அந்நாட்டு மன்னர் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். வனங்களைப் பாதுகாக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எங்கள் பிராந்தியக்களில் கள்ள மரம் கடத்தல் போன்றவற்றை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். வன மிருகங்களைக் கொன்று குவிப்பதை நாம் தடுக்க வேண்டும். இவை பற்றிய தகவல்கள் கிடைத்தால் எமது அலுவலகத்திற்கு அறிவிக்கத் தவறாதீர்கள். எமது செலாளரிடம் இருந்து தொலைபேசி விபரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வடபகுதியில் தமிழர்களுக்குரிய அடையாளங்கள், தெற்கில் உள்ள கடும் போக்காளர்களாலும் மற்றையோராலும் மறுக்கப்பட்டு வரும் இத்தருணத்தில் அனுராதபுரம் இராச்சியம் அமைந்துள்ள பகுதியில் 12ம் நூற்றாண்டு காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவன் ஆலயம் உருக்குலைவின்றி மண்ணுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது தமிழ் பேசும் இந்துக்களின் இருப்பிடம் எங்கு வரையெல்லாம் வியாபித்திருந்தது என்பதற்கு சான்றுகளாக விளங்குகின்றது.
சரித்திரங்கள் மாற்றப்படலாம் வரலாறுகள் புனையப்படலாம். ஆனால் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படமுடியாது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த அடையாளங்கள் 21ம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது போன்று எமது நீண்ட வரலாறுகள் காலம் கடந்தும் இம்மண்ணில் பேசப்படும் என்ற விடயங்களை கடும் போக்காளர்கள் தெரிந்து வைத்திருப்பது நன்மை பயப்பன. வடமாகாணத்தில் கருங்கற் பாவனை குறைவாக இருந்ததால் கல்வெட்டுக்கள் போன்ற நீண்ட கால அடையாளச் சின்னங்கள் அல்லது நடந்தவற்றை நிரந்தரமாகப் பொறித்து வைக்க உதவும் பொருட்கள் குறைவாகவே எமது பாரம்பரியத்தை விளக்கி வந்துள்ளன. அதனால் எமது பாரம்பரியம் அண்மைய காலத்தினதே என்று கூறுவது தவறானது. போகப் போக எமது சரித்திரம் வெளிக்கொண்டுவரப்படும்.
ஆனால் மக்களின் உரித்துக்கள் யார் முதலில் வந்தார்கள் என்பதில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அப்படியானால் அமெரிக்கா செவ்விந்தியருக்கே உரித்தாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பல காலமாகப் பின்பற்றி வந்திருந்தால் அவர்களுக்கென சில சட்ட ரீதியான உரித்துக்கள் இருக்கின்றன என்பதைச் சர்வதேசச் சட்டம் ஏற்றுக் கொள்கின்றது. ஆகவேதான் நாங்கள் எங்கள் பிராந்தியத்திற்கு சில தனித்துவமான உரித்துக்களைக் கேட்டு நிற்கின்றோம். சம~;டி அடிப்படையிலான அரசியல் யாப்பைக் கேட்டு நிற்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட வயதை எமது பிள்ளைகள் எய்திவிட்டால் அவர்கள் தம்மைத் தாமே பார்த்துக் கொள்ள, பரிபாலனம் செய்ய, பாதுகாத்துக் கொள்ள இடமளிக்க வேண்டும். அது போன்றதே அரசியல் சிந்தனைகளும். அவரவர்களின் தனித்துவத்தைப் பேண அந்தந்தப் பிராந்திய மக்களுக்கு இடமளிக்க வேண்டும். இதனையே நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இது சிங்கள மக்களையுஞ் சாரும். எம்மையும் சாரும். எமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து எம்மை நாமே பரிபாலித்து வர எமது அரசியல் யாப்பு இடமளிக்க வேண்டும்.
எனவே எமது கொள்கைகளில் நின்று எந்தவித மாற்றமும் இன்றி எமது இருப்புக்களை உறுதி செய்வதற்கும் எமது மக்களின் அமைதியான வாழ்க்கை முறைமைக்கு ஏற்ற சூழல்களை ஏற்படுத்துவதற்கும் நாம் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றோம். இன்றைய இந்த நிகழ்வில் உதவிகளை பெற்றுக் கொள்கின்ற பயனாளிகள் இந்த ஆரம்ப உதவு பொருட்களுடன் நீங்கள் முயன்று முன்னேற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் நாம் தினமும் ஏனையவர்கள் கையை எதிர்பார்க்கக் கூடாது. அவ்வாறு எதிர்பார்ப்போமாகில் எமது சிந்தனைகள் சுயமாக உழைக்கின்ற தன்மையில் இருந்து விடுபட்டு தினமும் மற்றவர்களின் கைளை எதிர்நோக்குகின்ற செயற்பாட்டிற்கு இடமளிக்கும். ஆகவே நாம் எமது சொந்த உழைப்பில் எளிமையான வாழ்க்கை முறையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அது பிற்காலத்திற்கு உதவி புரியும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சுயமாக முன்னேற நாங்கள் உங்களுக்குப் படி அமைத்துக் கொடுத்துள்ளோம். வாழ்க்கையில் பல சோதனைகளையும் பாதிப்புக்களையும் எதிர்கொண்ட நீங்கள் எமது இந்த உந்துதல் உதவிகளால் உயர்வு பெற உழைக்க வேண்டும் என்று கேட்டு எனக்குப் பேச வாய்ப்பளித்த சகலருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com