சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தைக்காய் குரல்கொடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன் ?

இந்தக் கல்லூரியில் அதிகராக இருந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தைக்காக நாங்கள் குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் ஆனால் எங்கள் அரசியல்வாதிகள் எவரும் அவருக்காகவோ அவர் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பிலோ தங்களது உரைகளில் ஒரு வசனம் கூட பேசாது தவிர்த்தது ஏன் என காணாமல் போனோர் தொடர்பில் பணியாற்றிவரும் மனித உரிமைகள் ஆர்வலர் அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் இன்று (19.02.2018) நடைபெற்ற ஆய்வுகூடத் திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.
அவரது வருகையைக் கண்டித்து யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைந்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக மூவரை பொலிசார் அழைத்துச் சென்றனர். இறுதிவரை எங்களை ஜனாதிபதி சந்திக்கவேயில்லை.
நாங்கள் இன்று காணாமல் போனவர்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். பாதர் ஜிம்ரான் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். பாதர் பிரான்சிஸ் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர் இந்தக் கல்லூரியின் அதிபராக இருந்திருக்கின்றார்.
ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்வின்போது எந்த ஒரு அரசியல் தலைவரோ, கல்லூரி சார்ந்தவர்களோ, முதலமைச்சரோ, எதிர்க்கட்சித் தலைவர்கூட காணாமல் போன இந்த அருட்தந்தை பற்றி எந்தவித வார்த்தையும் கூறவில்லை. ஏன் இவ்வாறு நடந்துகொண்டீர்கள் எனக் கேட்கின்றோம். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று எவரும் ஜனாதிபதியிடம் கேட்கவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com