சரசாலையில் மிரட்டும் வன்முறைக் கும்பல் – மக்கள் அச்சம் தெரிவிப்பு

தென்மராட்சி சரசாலைப் பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் கும்பல்களினால் தாம் அவதியுறுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அக் குழுவினர் பாடசாலை மாணவர்கள் முதற்கொண்டு அனைவரையும் அச்சுறுத்தி வருவதாகவும் அது தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்தபோதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அக் கும்பலுக்கும் பொலிசாருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என தாம் அச்சம் அடைவதாகவும் கவலை வெளியிட்டுள்ளர்.

அண்மையில் அப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றைச் சுட்டிக்காட்டிய அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டபோது,
கடந்த 9.8.2017 இரவு தரம் 10 ஐ சேர்ந்த இரு மாணவர்களும் தரம் 8 ஐ சேர்ந்த ஒரு மாணவருமாக தனிப்பட்ட வகுப்பை முடித்துக்கொண்டு சரசாலை பருத்தித்துறை வீதி ஊடாக தமது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு கடையடியில் கூடிநின்ற சரசாலையை சேர்ந்த ரவுடிக் கும்பலால் காரணமின்றி தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவன் காயமடைந்ததுடன் ஏனையோர் சிதறி ஓடி அருகில் உள்ள  கடையில் பதுங்கிக் கொண்டனர்.
பெற்றோர் அவ்விடத்திற்கு வந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தோம்.

இதில் முக்கிய பங்குவகித்த கம்மாலை நடத்துபவரின் தாயார் குறித்த மாணவர்களின் வீடுகளிற்கு சென்று பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெறாவிடின் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியதுடன் குறித்த சம்பவம் இடம்பெற்ற  கடை உரிமையாளரும் அச்சம் காரணமாக தாக்குதல்தாரிகளை நன்கு அறிந்தும் தன்னால் இனம் காண முடியவில்லை என பொலிஸாரிற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களிற்கு முன்னர் கனகன்புளியடி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் மேற்படி தாக்குதலாளிகள் மீது பொலிஸார் காட்டிவரும் மெத்தனப் போக்கு பொதுமக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. குறித்த கம்மாலையில் வாள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கஞ்சா வியாபாரம் நடைபெற்றுவருவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.
சாவகச்சேரி பொலிஸாரிற்கும் இவ் ரவுடிக் கும்பலிற்குமிடையே இரகசிய தொடர்புகள் இருப்பதாலேயே இவர்கள் சுதந்திரமாக செயற்பட முடிவதுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் சந்தேகம் ஏற்படுகின்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடையத்தில் பொலிஸ் தரப்பு நடவடிக்கை எடுக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com