சம்பந்தன் – சுமந்திரனின் துரோகச் செயற்பாடுகளிற்கு ஜனநாயக அங்கீகரம் பெறும் நாடகமே வவுனியா கூட்டம் – கஜேந்திரன்

சுமந்திரன் ஜெனீவா சென்று இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரைகளைச் செய்துவிட்டு அதனை ஜனநாயகரீதியில் தாங்கள் முடிவெடுத்ததாக காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகமே நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (12) ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்ட அவர் தெரிவித்ததாவது,

ஏற்கனவே ஒன்றரைவருடகால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காணாமல் போனவர்கள்தொடர்பாக இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை. தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சூழலிலே மீண்டும்கால அவகாசம் வழங்கக்கூடிய சூழலிற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தமிழ் மக்களுடைய உத்தியோக பூர்வமான நிலைப்பாடாக உள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற எழுக தமிழ் ஊடாக மக்கள் இதனை தெளிவாக உணர்த்தியிருக்கின்றார்கள். விசாரணைக்கான பொறுப்பினை இலங்கையிடம் ஒப்படைக்காது சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பதுதான் தமிழ் மக்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது. புலம்பெயர்தமிழர்களின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கின்றது.
ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ்த் தலைமைகள் இலங்கைக்கு கால அவசாகம் வழங்க முன்வந்திருப்பது தமிழ் மக்களை பேரபத்திற்குள் தள்ளுவதோடு நீதிக்கான விசாரணைகளை இல்லாமல் செய்கின்ற ஒரு நடவடிக்கையாகும். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடாக உள்ளது. நடைபெற்ற குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது பாதுகாப்புச் சபைக்கு அல்லது பொதுச் சபைக்கு பரிந்துரை செய்வதனூடாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்பதே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கையாகும்.
இந்நிலையில் நேற்றையதினம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேற்றையதினம் வவுனியாவிலே கூட்டம் ஒன்றினைக் கூட்டியுள்ளது. ஊடக சந்திப்பிலே கடுமையான நிபந்தனைகளுடன் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என தாங்கள் வலியுறுத்துவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த வாரம் ஜ.நா கூட்டத்தொடர் ஆரம்பித்த பொழுது ஆணையாளரின் அறிக்கைகள் வெளிவந்த தருணத்திலே இலங்கையின் ஜனாதிபதியும் சரி பிரதமரும் சரி வெளிவிவகார அமைச்சரும் சரி மிகத் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள் கலப்புப் பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக் கொள்ளுதல் என்ற பேச்சிற்கே இடம் இல்லை என. இது மட்டுமல்லாமல் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜனாதிபதி பலாலியிலே படையினர் முன் படையினரை நீதிமன்றில் நிறுத்தி விசாரணை செய்ய அனுமதிக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தப் போவதில்லை என்ற விடையம் வெளிநாடுகளிற்கும் தெரியும்.
இந்த நேரத்திலே பாதிக்கப்பட்ட தமிழர்களுடைய தலைவர்கள் எனக் கூறிக்கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையான நிபந்தனைகளோடு தீர்மானத்தை ஆதரிப்பதாக கூடித் தீர்மானித்திருப்பது வெளிப்படையக அல்லது மறைமுகமாக கால அவகாசம் வழங்கவேண்டும் என்பதையே காட்டுகின்றது.

குமாரபுரம் படுகொலை, ரவிராஜின் படுகொலை குற்றவாளிகள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்ட சூழலில் இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில் தமிழ்த் தேசியக் கூடு்டமைப்பு இவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை எடுத்திருப்பது இராணுவத்தையும் இந்த அரசாங்கத்தையும் பாதுகாக்கின்ற ஒரு நிலைப்பாடகவே நோக்கவேண்டும். இதைவிட குற்றங்களில் ஈடுபட்ட மகிந்தராஜபக்சவையும் கோட்டபாய ராஜபக்சவையும் நேரடியாகப் பாதுகாக்கின்ற ஒரு செயற்பாடகாத்தான் சம்மந்தன் சுமந்திரனின் நேற்றைய கூட்ட அறிவிப்பு காணப்படுகின்றது. இதற்காகத்தான் இவர்கள் கங்கணம்கட்டிக்கொண்டு இந்தத் தீர்மானத்தை இவர்கள் எடுத்திருக்கின்றார்கள்.

அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஒரு போதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. கடுமையான கண்காணிப்பு என சுமந்திரன் திரும்பத் திரும்ப பயன்படுத்துவதற்கான காரணம் எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு பசப்பு வார்த்தை மட்டுமே ஒரு ஒரு போதும் நடைமுறைப்படுத்தப்படாது என்பது சுமந்திரனுக்கும் நன்றாகத் தெரியும்.
எதிர்காலத்தின் எமது மக்களிற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் தவறிப்போகுமாக இருந்தால் அதற்குரிய முழுப் பொறுப்பினையும் இந்தக் கூட்டமைப்பினர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு அதரவு வழங்கிய அனைத்து மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் துரோகத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும். அந்தவகையிலே சிவசக்தி ஆனந்தன் ஒரு துணிச்சலான முடிவினை எடுத்திருக்கின்றார். இந்த ஏமாற்று நாடகத்திற்கு ஒத்துளைக்காது தனது நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியது உண்மையிலே பாராட்டுதலிற்குரியது.
இவர்கள் நேற்றையதினம் ஒரு கூட்டத்தை நடாத்தி தாங்கள் ஏதோ ஜனநாயக ரீதியிலே தமிழ்மக்களுடைய விருப்பப்படி அந்தத் தீர்மானத்தை எடுத்தது போன்ற ஒரு நிலைப்பாட்டை காட்ட சுமந்திரனும் சம்பந்தனும் முற்பட்டிருக்கின்றார்கள். ஆனால் விக்கினேஸ்வரன் ஐயா எழுத்துமூலமாக ஒரு விடையத்தை வெளிப்படுத்தியிருப்பதாக பத்திரிகைகளில் தகவல்கள் வந்திருக்கின்றது. ஏற்கனவே கால அவகாசம் கொடுக்கவேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலேயே முன்வைக்கப்பட்டதான குற்றச்சாட்டு அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சுமந்திரன் ஏற்கனவே தன்சார்பிலே ஜெனீவா சென்று அந்தப் பரிந்துரைகளைச் செய்துவிட்டு இங்கு வந்து ஒரு பொய் நாடகம் ஆடிக்கொண்டிருந்தார். அதன்பின்னர் கிழக்கு எழுக தமிழ் ஊடக ஏற்பட்ட அழுத்தங்கள் பதினொரு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தது.
அதனுடைய எதிரொலியாக அதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக நேற்றைய கூட்டம் அதாவது தாங்கள் அனைவருடனும் கதைத்துப் பேசி ஒரு ஜனநாயக ரீதியாக முடிவெடுத்ததான ஒரு நாடகத்தை இவர்கள் அரங்கேற்றியிருக்கின்றார்கள்.
ஒரு விடையத்தை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதற்காக அவர்கள் எல்லோரும் கூடி எடுக்கின்ற முடிவுகள் அந்த மக்களிற்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் ஒரு பொழுதும் முடிவெடுத்துவிட முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com