சற்று முன்
Home / செய்திகள் / சமுர்த்தி வங்கி, சமுர்த்தி திட்டம்; விரிவாக ஆராய மூவர் குழு

சமுர்த்தி வங்கி, சமுர்த்தி திட்டம்; விரிவாக ஆராய மூவர் குழு

சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி திட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து சிபாரிசுகளுடன் கூடிய விஷேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். றுவன் சந்திர தலைமையில் விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இக் குழுவில் திறைசேறியின் பிரதிச் செயலாளர் ஏ. ஆர். தேசப்பிரிய, இலங்கை மத்திய வங்கி பிரதி ஆளுநர் கே. டி. ரணசிங்க ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விஷேட குழுவை நியமித்துள்ளார்.

கூடிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் பலர் முறைகேடான வகையில் சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கும்பொருட்டும், நிதியமைச்சருடன் கலந்தாலோசித்து சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதியுடைய குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தாமதமின்றி நிவாரணத்தை பெற்றுக்கொடுக்குமாறு சமூக வலுவூட்டல் அமைச்சருக்கு பிரதமர் ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமுர்த்தி வங்கியின் சொத்து 101 பில்லியன் ரூபாவாக இருக்கும் அதே வேளை, அந்த வங்கி 2016 ஆம் ஆண்டில் 33 மில்லியன் ரூபா வருமானத்தையும் 2017இல் மூன்று பில்லியன் ரூபா வருமானத்தையும் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிதித் தகவல்கள் அடிப்படையில் மட்டும் சமுர்த்தி வங்கி சீராக இயங்குவதாக கொள்ள முடியாதெனவும் ‘சனச’ போன்ற வங்கி மிகக் குறைந்த நிதி வளத்தைக் கொண்டு குறுகிய காலத்தில் இலாபமீட்டியவாறு புதிய கட்டடங்களை நிறுவி நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுக்கொள்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேசில் செயற்பட்டு வரும் ‘கிராமின்’ வங்கித் திட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு நியாயமான கடன் வழங்கும் வேலைத் திட்டத்தினூடே வறுமையை ஒழிப்பதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தி வங்கியை உரிய முறையில் மறுசீரமைத்து ‘கிராம ராஜ்ய’ வங்கியாக பொதுமக்களின் நலன்களுக்காக பயன்படுத்த முடியும் எனவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ. ஹரிசன், நிதியமைச்சின் செயலாளர் ஆர். எச். எஸ். சமரதுங்க உட்பட சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.

மத்திய வங்கி ஆளுநர்

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கருத்து தெரிவித்தபோது, சமுர்த்தி வங்கி வலயமைப்பை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கான எந்த முடிவையும் மத்திய வங்கி எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். நேற்றுக்காலை மத்திய வங்கித் தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட ஊடக மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் மூலம் நிதிக்கொள்கை விளக்கம் 2018 தீர்மானங்கள் தொடர் விளக்கமளிக்கும் ஊடக மாநாட்டின்போது சமுர்த்தி வங்கி விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டார்.

மத்திய வங்கி சமுர்த்தி வங்கி வலையமைப்பின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பணியையே மேற்கொள்கின்றது.

அதைத் தவிர அந்த வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரும் எந்தத் தீர்மானத்தையும் மத்திய வங்கி எடுக்கவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com