சந்தானம் ஐயாவின் பிரிவானது ஈழத்தமிழ்த் தேசத்திற்கு ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும்! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ஈழத் தமிழ் மக்களையும் அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் உயிருக்கு உயிராக நேசித்து அதற்காகவே வாழ்ந்தவர் ஓவியர் வீரசந்தானம் ஐயா.

ஓவியர் வீரசந்தானம் ஐயா அவர்களது மறைவுச் செய்தியறிந்து அதிச்சியும் ஆழந்த கவலையும் அடைகின்றோம். ஐயாவின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஓவியர் சந்தானம் அவர்கள் ஈழத் தமிழ் மக்களை மிகவும் ஆழமாக நேசித்தார்.  தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும்  ஈழ தேசத்த்தின் விடுதலையையும் தனது உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அதே போல் ஈழத் தமிழ் மக்களும் சந்தானம் ஐயா மீது அளவற்ற அன்பையும் பாசத்தினையும் கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் மனம் தளர்ந்து ஓய்ந்து போகாது தொடர்ந்தும் மிகுந்த நம்பிக்கையுடன் உரிமைப் போராட்டக் கடமைகளை முன்னெடுத்துவந்தார். ஓர் ஈழவிடுதலைப் போராளியாகவே ஐயா வாழ்ந்து வந்தார்.

தமிழ் மக்கள் மீதுஇனவழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசானது தாம் செய்த கொடுங்கோண்மையை மூடி மறைக்கும் நோக்கில் இனவழிப்பு நடைபெற்றதற்கான அனைத்து தடயங்களையும் தனது அரச அதிகார இயந்தரத்தை பயன்படுத்தி அழித்துக் கொண்டிருந்தது.

அவ்வேளையில் இனவழிப்யு நடைபெற்றது என்ற உண்மையை சரித்திரத்திலிருந்து அழிக்க முடியாதவாறு தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் நினைவிடம் அமைக்கப்பட்டபோது அங்கு ஈழத்து இனவழிப்பு கொடூரங்களை வெளிப்படுத்தும் ஓவியங்களை கல்லில் தனது கலைப்படைப்பு மூலம் கற்சிலையாக வடித்தெடுத்து இனவழிப்பை அழிக்க முடியாத சரித்திரமாக்குவதில் பெரும் பங்கு வகித்திருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த ஓவியர் இலட்சிய உறுதிமிக்க போராளியாக ஈழத் தமிழருக்காக நடைபெற்ற அறப்போராட்டங்களில் முன்நின்று ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர். சந்தானம் ஐயாவின் பிரிவானது ஈழத்தமிழ்த் தேசத்திற்கு ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும்.

தமிழ் இன விடுதலைக்காகவே வாழ்ந்த விடுதலைச் சுடர் ஒன்று எமது கண்களிலிருந்து மறைந்துவிட்டது. சந்தானம் ஐயா அவர்களை ஆழமாக நேசிக்கும் அனைத்துத் தமிழ் மக்களும் அவருக்காக செய்யக்கூடிய அஞ்சலியானது அவரது இலட்சியத்தை ஈடேற்றுவதற்காக அற்பணிப்புடன் உழைப்பதேயாகும்.

சந்தானம் ஐயாவின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்இ அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றோம். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com