சத்தியலிங்கம், டெனீஸ்வரன் பதவியிறங்க சம்மதம்! – சித்தார்த்தன்

வடக்கு மாகாணசபையின் சர்ச்சைக்குரிய அமைச்சர்களாக இருக்கின்ற சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகிய இருவரும் பதவியிறங்க சம்மதித்துள்ளதாக தெரியவருகின்றது.

இரா.சம்பந்தன் பங்கெடுப்பினில் முதலமைச்சர், கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பில் நடந்த பேச்சுக்களினையடுத்து இத்தீர்வு வந்திருப்பதாக புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மாற்றத்தின் போது மாகாணசபையினில் குழப்பங்களை விளைவித்த சுமந்திரன் அணியினை சேர்ந்த அஸ்மின், சயந்தன், ஆனோல்ட், சுகிர்தன், மற்றும் பரஞ்சோதி தவிர்ந்த வேறு எவரையும் அமைச்சுக்காக தமிழரசுக்கட்சி பரிந்துரைத்தால் ஏற்றுக்கொள்ள தயார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சி சார்ந்த அமைச்சர் சத்தியலிங்கத்தின் பதவிவிலகல் கடிதத்தை தான் உடனடியாக பெற்றுத்தருவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.அத்துடன் அனந்தி தமிழரசுக்கட்சி சார்ந்தவர் அல்லவென்பதால் தமிழரசுக்கட்சிக்கு அமைச்சரவை தரவேண்டுமெனவும் மாவை வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம் அனந்தி தற்காலிகமாக மூன்று மாதமே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் அனந்திக்கு பதிலாக புளொட் சார்பு உறுப்பினரொருவர் அமைச்சராக்கப்படவுள்ளதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.அத்துடன் டெலோ சார்பினில் விந்தன் கனகரட்ணம் டெனீஸ்வரனது இடத்திற்கு பதவியேற்கவுள்ளார்.

அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தனக்கு கனதியான பதவி வேண்டுமென முதலமைச்சர் கதிரையினை வைத்து காய் நகர்த்தியிருந்த நிலையினில் தற்போது சோர்ந்து போயுள்ளார்.அதனால் சத்தியலிங்கத்தின் சுகாதார அமைச்சினை சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் பேரவை தலைவர் பதவியை சத்தியலிங்கத்திற்கும் மாற்றி வழங்க மாவை தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

வடமாகாணசபையின் அடுத்த அமர்விற்கு முன்னதாக இத்தகைய அமைச்சரவை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.இதனிடையே தன்னை அமைச்சராக பதவியினில் தொடர சித்தார்த்தனிடம் அனந்தி கோரியதையடுத்து தமது கட்சி சார்பினில் அனந்தியை தொடர்ந்து அமைச்சராக செயற்பட அனுமதிப்பது தொடர்பினில் கட்சியுள் பேச முடிவு செய்துள்ளதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அனந்தி சித்தார்த்தனிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களினில் முழுவீச்சினில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com