சகாயம் மனதில் என்ன இருக்கிறது? – பக்கத்து வீட்டு அரசியல்

.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று செய்யப்படும் பிரசாரம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டு வருகிறது. இதற்கும் சகாயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரசாரம் செய்பவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் அன்புமணிக்கு எதிராக சகாயத்தை தி.மு.க-தான் முன்னிலைப்படுத்துகிறது என்று கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார் ராமதாஸ். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 சென்னை அறிவியல் நகரத்தின் செயலாளர் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்ட ஆணையர் என்கிற பொறுப்புகளை வகித்துவருகிறார் சகாயம். ‘சகாயம் முதல்வராக வர வேண்டும்’ என்று ஒருசில அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ‘தமிழகம் தலைநிமிர சகாயம் முதல்வராக வேண்டும்’ என்ற பதாகைகளைப் பிடித்துக்கொண்டு, வெள்ளைச் சீருடையுடன் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னையில் சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தினர். ‘முதல்வர் வேட்பாளராக சகாயம் வரவேண்டும்’ என்று, மதுரையில் வரும் 3-ம் தேதி ஒரு கூட்டத்துக்கு சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். அதுதொடர்பான விளம்பரச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
‘அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்குவோம்’ என்று இளைஞர்கள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் களத்தில் இறங்கி ஆங்காங்கே கூட்டங்கள் போட்டு பேசிவருகிறார்கள். இவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க உளவுத் துறையினர் ஓவர் டியூட்டி பார்க்க வேண்டி உள்ளது.
‘பனிஷ்மென்ட்’ என்று நினைத்து அரசு கொடுக்கும் எந்தப் பொறுப்பாக இருந்தாலும், அதையும்கூட சிறப்பாகச் செய்து தன் திறமையையும், நேர்மையையும் நிரூபிப்பதுதான் சகாயத்தின் ஸ்டைல். இதுவரை 23 முறை அவர் வெவ்வேறு இடங்களுக்குத்  தூக்கியடிக்கப்பட்டு இருக்கிறார். இப்போது, பெரிய அளவில் வேலை எதுவும் இல்லாத அறிவியல் நகரத்தின் அதிகாரியாக அவரை தமிழக அரசு வைத்துள்ளது.

“ஓர் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்கு செலவு செய்கிற வகையில் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் இருக்கும். ஆனால், அறிவியல் நகரத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கப்படும் தொகை வெறும் ஒரு கோடிதான். அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்தத்தான் இந்தத் தொகை. அப்படிப்பட்ட இடத்தில் அமர்த்தி, நேர்மையான அதிகாரி ஒருவரின் திறமையை வீணடிக்கிறார்கள்’’ என்கிறார் அரசு அலுவலர் ஒருவர். 

‘‘டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்போல தமிழகத்தில் சகாயமும் அரசியலுக்கு வந்துவிடுவார்; அது தமிழகத்தில் பி.ஜே.பி-யின் வளர்ச்சிக்குப் பாதகமாக முடிந்துவிடும்; அதனால் அவரை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்து மக்களிடம் நல்ல பெயரை வாங்கலாம், அதன்மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கும் தடை போடலாம் என்று பி.ஜே.பி அரசு நினைக்கிறது” என்று சிலர் சொல்லி அதிர்ச்சியைக் கூட்டுகிறார்கள்.  இன்னொரு பக்கம், மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சகாயத்தை அறிவிக்க உள்ளார்கள் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படியொரு பரபரப்பான சூழலில்…. சகாயமோ, எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் வழக்கமான தனது வேலைகளைச் செய்து வருகிறார். கிரானைட் மோசடி பற்றிய விசாரணையை வெற்றிகரமாக முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்த சகாயம், அதற்காக ஒதுக்கப்பட்ட அலுவலகத்தைப் பார்வையிட்டு சில நடைமுறைகளை முடித்து வருகிறார். தனக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்லி கூட்டங்கள் போடுகிற, பேரணி நடத்துகிற நபர்கள் பற்றி சகாயத்துக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். இந்தச் செய்திகளை பத்திரிகைகள் மூலமாகத்தான் சகாயம் தெரிந்துகொள்கிறாராம். தன் பெயரைப் பயன்படுத்துபவர்கள் பற்றியும், அவர்களின் இந்தச் செயல்பாடுகள் பற்றியும் எந்தக் கருத்துச் சொன்னாலும், அதனால் தேவையில்லாத சர்ச்சைகளை மீடியாக்கள் உருவாக்கும் என்று சகாயம் கருதுகிறாராம். அதனால்தான் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதுவரை, முகநூல் உட்பட எந்தவொரு சமூக வலைதளங்களிலும் சகாயம் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.

‘‘தமிழகத்தில் மாறிமாறி வரும் தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகளால் விரக்தி அடைந்துள்ள தமிழக மக்கள், ஒரு மாற்று அரசியலை எதிர்பார்க்கிறார்கள். நேர்மைக்கு அடையாளமான சகாயம், அதற்குப் பொருத்தமான நபர் என்று நினைக்கிறார்கள். ஆகவே, சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், சகாயத்தின் நோக்கம் எல்லாம், அரசுப் பதவியில் இருந்துகொண்டே மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்பதுதான்’’ என்றும் சொல்கிறார்கள்.

கடந்த 23-ம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை சகாயம் தொடங்கி வைத்தார். அப்போது, “ஆட்சியாளர்களைத் தேடி மாற்றுத்திறனாளிகள் மனுக்கொடுக்கும் நிலை மாறி, மனுக்களை வாங்கும் நிலைக்கு மாற்றுத் திறனாளிகள் வர வேண்டும். அவர்கள் ஆட்சியர்களாக வரவேண்டும். ஏனென்றால், பதவியை வைத்துதான் ஆளை மதிக்கிறார்கள். சமூகத்தில் எங்கெல்லாம் இவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்களோ, ஒதுக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் இவர்களை உயர்த்திக்காட்ட வேண்டும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், யார் வேண்டு மானாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரலாம். 

அரசு நிர்வாகக் கோபுரத்தின் உயர்ந்த பதவிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால்தான் நிரப்பப்படுகின்றன. அரசியல் நெருக்கடிகளால் ஐ.ஏ.எஸ் போன்ற பதவிகளின் முக்கியத்துவம் குறைந்தாலும், லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியம் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதாகத்தான் உள்ளது. நான் எப்படி உருவாகி இருக்கிறேன் என்பதைவிட, மக்களை எப்படி உருவாக்கி இருக்கிறேன் என்பதுதான் முக்கியம். நாம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆவதைவிட, எத்தனை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உருவாக்கி உள்ளோம் என்பதுதான் நமக்குப் பெருமை. இந்த மையத்தின் வாயிலில், ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை 15 ஆண்டுகளாக நான் தாங்கி வந்தபோது சந்தித்த சோதனைகள் ஏராளம். இதைப் பார்த்து நம் பிள்ளைகளுக்கு அந்தச் சோதனைகள் வரவேண்டாம். அந்த வாசகத்துக்குப் பதிலாக, இந்த மையத்துக்கு ‘நேர்மை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம்’ என்று பெயர் வைத்துவிடலாம். நேர்மை அதிகாரத்துக்கு மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்துக்கும் நேர்மையானதாக இருக்க வேண்டும்’’ என்றார் சகாயம்.

அதே நாளில் திருமங்கலத்தில் தனியார் பள்ளி மரக்கன்று நடும் விழாவில் பேசிய சகாயம், “23 ஆண்டுகளாக அரசுத் துறையில் பணியாற்றி வருகிறேன், 23 முறை இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளேன். இதுதான் நேர்மைக்குக் கிடைத்த பரிசு. மாணவர்களாகிய நீங்கள் எப்போதும் நேர்மையுடன் இருக்க வேண்டும்’’ என்று பேசினார். 

எல்லா இடங்களிலும் நேர்மை பற்றி சகாயம் பேசுகிறார். அது, நேர்மை இல்லாத நபர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மதுரை, திருமங்கலம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வந்திருந்து, சகாயத்தின் பேச்சைப் பதிவுசெய்தனர். இதுபோன்ற அதிகப்படியான கண்காணிப்பும், நெருக்கடிகளும் சகாயத்தை அரசியலுக்கு இழுத்து வந்தாலும் வந்துவிடும்.

மதுரை நிகழ்ச்சியில் பேசிய சகாயம், முத்திரையான ஒரு கருத்தைச் சொன்னார். அது: 

“தடைக்கற்கள் ஒவ்வொன்றையும் படிக்கற்களாக மாற்ற வேண்டும். வாய்ப்பு ஒருமுறைதான் வரும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com