கோவில் சண்டையில் உருவான குழுவே ஆவா குழுவாக உருவெடுத்தது – சட்டம் ஒழுங்கு அமைச்சர்

sagala-ratnayakaஆவா குழுவுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் தொடர்பு இல்லை. எனினும், இந்தக் குழுவுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற தமிழ் வீரரென சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ வீரர்கள் யாராவது ஆவாக் குழுவுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்தக் குழு பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டதல்ல, கோவில் சண்டையில் உருவான குழுவே என்றும் கூறினார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் அநுரகுமார திசாநாயக்க எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சாகல ரத்னாயக்க இதனைத் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு யாழ்பாணம், இணுவில் அம்மன் கோவிலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூடிய குழுவே ஆவா குழுவாக உருவெடுத்துள்ளது. இக்குழுவில் உள்ளவர்கள் யாழ் குடாநாட்டின் பல்வேறு அடிதடிகளில் ஈடுபட்டதுடன், அவர்களை ‘ஆவா’ குழு என்று அடையாளப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.

இதன் தலைவராக கண்ணியம்மான் கோவில் அருகில் இணுவில் மேற்கு, இணுவில் பகுதியில் வசிக்கும் குமரேஸ் ரத்தினம் வினோதன் செயற்பட்டு வருகிறார்.

இவர் உள்ளிட்ட பலர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆவா குழுவில் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே பெரும்பாலும் காணப்படுகின்றனர். இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்களை பயமுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்துதல் மற்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் இந்த குழுவினர் ஒப்பந்த அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் போன்ற செயற்பாடுகளில் இவர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். இதுமாத்திரமன்றி குற்றவாளியாக காணப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு அந்த தண்டப்பணம் செலுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.

இந்தக் குழுவில் சுமார் 62 பேர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 38 பேர் கைது செய்யப்பட்டு 6 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. 32 பேருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரதான தலைவர்கள் எனக் கருதப்படும் 8 பேரைத் தேடிவருகின்றோம்.

அதில் புதிய தலைவரும் இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில், ஆரம்பத் தலைவர் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. வெளிநாடுகளிலுள்ள உறவினர்கள் மூலமே இவர்களுக்கு பணம் வருவதாகவே நாம் கருதுகிறோம். இந்த சகல இளைஞர்களிடமும் நவீன ரக மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன.

இதேநேரம், தென்னிந்தியாவில் இருந்து வந்த உறுப்பினர் ஒருவர் மூலமே இந்த குழுவினருக்கான முதலாவது வாள் வந்துள்ளது. பிரேசிலில் இருந்தே அந்த வாள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது போன்ற பல வாள்கள் இங்குள்ள ஆயுத பட்டறைகளிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறான வாளை தயாரிக்க முடியாதென மறுத்த ஆயுத பட்டறை உரிமையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் பதிவாகியுள்ளது.

ஆகவே, இவ்வாறு இந்த விசாரணைகளை நாம் நடத்திச் செல்கிறோம். இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்ட இராணுவ உறுப்பினர் பற்றி, அவர் இராணுவத்தின் சுயேட்சை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை ரெஜிமென்ட்டில் பணியாற்றிய ஒருவர். பல மாதங்களாக அவர் கடமைக்கு சமுகமளித்திருக்கவில்லை.

ஆகவே, தப்பிச்சென்றவராகவே கருதப்படுகிறார் என்றார். அவர் இராணுவத்தின் சுயேட்சை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் சேவை ரெஜிமென்ட்டில் பணியாற்றிய ஒருவர். பல மாதங்களாக அவர் கடமைக்கு சமுகமளித்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com