இங்கு கோளிக்கை நிகழ்வுகளை நடத்துபவர்களும் சரி கோளிக்கை நிகழ்வுகளில் பங்கேற்க வருகின்ற இந்தியக் கலைஞர்களும்சரி நீங்கள் மக்கள் கொன்றழிக்கப்பட்ட சுடுகாட்டின் மேலே நின்றே இவ்வாறான நிகழ்வுகளை செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து குறித்த நிகழ்ச்சிகளின் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியையேனும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அவ்வாறன்றில்லாமல் யுத்தத்தின் அவலங்களைத் தாங்கி நிற்கும் எம்மக்களது பணத்தை தனியார் கொள்ளையிட்டு வெளியே கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இந்திய பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தில் வருகை தந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்வொன்றை நடத்தவுள்ளனர். அதற்கு பத்தாயிரம் ரூபாவிற்கு கறுப்புப் சந்தையில் நுழைவு சீட்டுக்கள் விற்கப்படுவதாக அறிகின்றேன். இந்திய கலைஞர்களை நாம் மதிக்கின்றோம்
ஆனால் அவர்களது பெயரைப் பயன்படுத்தி யுத்த அவலங்களுடன் வாழும் மக்களது பணத்தைச் சுரண்டி ஒரு சிலர் கோடிகளில் வருமானம் ஈட்டுவதை அனுமதிக்க முடியாதென தெரிவித்த அவர் கலை நிகழ்வு மூலம் திரட்டப்படும் பணத்தில் ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.
நேரடியாகவோ அல்லது முதலமைச்சர் ஊடாகவோ அதனை பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பிக்க முடியுமென தெரிவித்த சிவாஜிலிங்கம் அதனை விடுத்து கிள்ளி தெளித்து மக்களை ஏமாற்றுவதை தவிர்க்கவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
சிலர் கலை நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்கிறனர். இது தமிழக மக்களிடையே கலைஞர்களினை அவமதிக்கச் செய்ததாக அர்த்தப்படுத்தப்பட்டுவிடுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யுத்த பாதிப்புக்குள்ளான எமது மக்கள் ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் இருக்க அவர்களிடமிருந்து சுரண்டிக்கொண்டு செல்வதை எப்போதும் அனுமதிக்க முடியாதெனவும் மேலும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.